கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ் + "||" + TNPL Cricket Dindigul Dragons advanced to the final

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்சை வெளியேற்றி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை நாளை சந்திக்கிறது.
திண்டுக்கல்,

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு திண்டுக்கல் நத்தத்தில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்சும் மோதின. திண்டுக்கல் அணியில் கேப்டன் ஆர்.அஸ்வின் இடம் பெறவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் அணியை வழிநடத்தினார்.


‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்த கேப்டன் ஜெகதீசனும், ஹரி நிஷாந்தும் அணிக்கு வலுவான அஸ்திவாரத்தை உருவாக்கினர். ஆனால் நிலைத்து நின்று ஆடிய இவர்களால் மதுரையின் பந்து வீச்சை பெரிய அளவில் அடித்து நொறுக்க முடியவில்லை. ஸ்கோரின் வேகம் சீராகத்தான் இருந்தது. நடப்பு தொடரில் 3-வது முறையாக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த இவர்கள் ஸ்கோர் 101 ரன்களை (14.4 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. ஜெகதீசன் 50 ரன்களிலும் (48 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹரிநிஷாந்த் 51 ரன்களிலும் (46 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் வந்த சதுர்வேத்தும், முகமதுவும் சிக்சர் மழை பொழிந்து இறுதி கட்டத்தில் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். சதுர்வேத் 35 ரன்களும் (13 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), முகமது 32 ரன்களும் (9 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணியினர் 73 ரன்கள் திரட்டி வியக்க வைத்தனர்.

அடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான அருண் கார்த்திக் முதல் ஓவரின் 4-வது பந்திலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய அவர் 11 ரன்களில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சரத்ராஜ் 3 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதனால் நெருக்கடிக்குள்ளான மதுரை அணியால் சிக்கலில் இருந்து மீள முடியவில்லை. மிடில் வரிசையில் ஜே.கவுசிக் (40 ரன், 32 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) சிறிது நேரம் மிரட்டினாலும் பலன் இல்லை.

மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் தரப்பில் ஆர்.ரோகித், சிலம்பரசன் தலா 3 விக்கெட்டுகளும், அபினவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை எதிர்கொள்கிறது.