தேசிய செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு; காவிரி ஒழுங்காற்றுக்குழு வரவேற்பு + "||" + Mettur Dam Opening; Welcome to the Cauvery Committee

மேட்டூர் அணை திறப்பு; காவிரி ஒழுங்காற்றுக்குழு வரவேற்பு

மேட்டூர் அணை திறப்பு; காவிரி ஒழுங்காற்றுக்குழு வரவேற்பு
மேட்டூர் அணை திறக்கப்பட்டதற்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வேட்டைச்செல்வன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் செயலாளர் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் 4 மாநில பிரதிகளும் தங்களது மாநில மழை அளவு, நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து, தண்ணீர் இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சமர்ப்பித்தனர். இதன்மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் கூட்டம் முடிந்ததும் குழுத்தலைவர் நவீன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைப்பொழிவு பற்றி ஒழுங்காற்றுக்குழு ஆய்வு செய்தது. பிலிகுண்டுலு வரையுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றுவரை அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது. பிலிகுண்டுலுவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் ஏறக்குறைய வழக்கமான அளவை நெருங்கியுள்ளது. பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டு இருப்பதற்கு ஒழுங்காற்றுக்குழு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறது.

காவிரிநீர் படுகையில் தற்போதுள்ள மழைப்பொழிவு, வானிலை நிலவரம் தொடர்பான மறு ஆய்வை அடுத்த கூட்டத்தில் நடத்துவது என்றும், அடுத்த கூட்டத்தை செப்டம்பர் 2-வது வாரத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.