மாநில செய்திகள்

அருண் ஜெட்லி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் + "||" + Death of Arun Jaitley Edappadi Palanisamy condolences

அருண் ஜெட்லி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அருண் ஜெட்லி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் மந்திரியாகவும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராகவும், அரசியல் உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன். தன்னுடைய மாணவ பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்வி சாரா செயல்பாடுகளுக்காக அருண் ஜெட்லி பாராட்டுகள் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவ சங்கத்தலைவராகவும், சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக இருந்துள்ளார். நிதித்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில், மக்களின் நன்மை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தியவர்.


நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக்கூடிய பண்பாளர். அருண் ஜெட்லியின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித்தொண்டர்களுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும். அருண்ஜெட்லியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அருண் ஜெட்லி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.