மாநில செய்திகள்

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நேரடியாக வழக்கு தொடர முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு + "||" + At temple festivals For the show-song show Asking for permission Cannot be sued directly High Court Order

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நேரடியாக வழக்கு தொடர முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நேரடியாக வழக்கு தொடர முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கிராமிய ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நேரடியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர், தன்னுடைய கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிராமிய ஆடல்-பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு மருவத்தூர் போலீசில் மனு கொடுத்தார். அனுமதி கிடைக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுபோல, பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெவ்வேறு கோவில் திருவிழாக்களுக்கு கிராமிய ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இதுபோல கலாசார நடனங்கள், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட முடியுமா? என்ற கேள்வியை கேட்டு, இதற்கு ஒரு தீர்வுகாண டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு உட்படுத்தும்படி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதன்படி, இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு மதுரை கிளையில், ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு பொதுநல வழக்குகள் பல தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதில், ‘இந்த வழக்கில் பொதுநலன் எதுவும் இல்லை. எனவே, நிகழ்ச்சி நடத்துவதற்கு குறைந்தது 2 வாரத்துக்கு முன்பே அனுமதி கேட்டு போலீசில் பொதுமக்கள் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எனவே, மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் ஏற்கிறோம். அதன்படி, இந்த வழக்குகளை முடித்துவைக்கிறோம். இனிமேல், கிராமிய ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு பொதுமக்கள் நேரடியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. அவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு கோரிக்கை மனு கொடுக்க வேண்டும்.

அந்த மனு கொடுக்கப்பட்ட நாளில் இருந்து 2 வாரத்துக்குள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவு மனுதாரர்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே, ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியும். இந்த உத்தரவு நகலை தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்கவேண்டும். அவர், இந்த உத்தரவு குறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.