தேசிய செய்திகள்

வருமானவரி அதிகாரிகள் இனி நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது - மத்திய மந்திரி தகவல் + "||" + The Income Tax Officers can no longer send notices directly - the Union Minister of Information

வருமானவரி அதிகாரிகள் இனி நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது - மத்திய மந்திரி தகவல்

வருமானவரி அதிகாரிகள் இனி நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது - மத்திய மந்திரி தகவல்
வருமானவரி அதிகாரிகள் இனிமேல் நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது. இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 2-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆமதாபாத்,

மத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மோடி அரசின் 100 நாள் சாதனைகள் பற்றி விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


முன்பெல்லாம் வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே முடிவு செய்து, மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர். அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

இனிமேல், எடுத்தவுடனே நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது. முதலில், அந்த நோட்டீஸ், அதை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு செல்லும். அங்கு ஆய்வு செய்யப்பட்ட பிறகுதான், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் செல்லும்.

இதன்மூலம், வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு இனிமேல் வேலை இருக்காது. இந்த முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.1 சதவீதமாக குறைந்தபோதிலும், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. பணவீக்கம், நிதி பற்றாக்குறை ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அன்னிய செலாவணி கையிருப்பு, அன்னிய நேரடி முதலீடு, வரி வசூல் ஆகியவை அதிகரித்துள்ளது.

வேலையில்லா திண்டாட்ட விகிதம், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக கூறுவது சரியல்ல. அரசு, எல்லோருக்கும் வேலை தர முடியாது. ஆனால் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியும்.

காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக கூற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தகுதி இல்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அவர் உணர வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த தவறு, சரி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் ஒரு தோட்டா கூட பயன்படுத்தப்படவில்லை. பொது சிவில் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை சட்ட அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.