தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி: ‘அபராதத்தை மாநில அரசே குறைக்கலாம்’ - மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு + "||" + Motorists are extremely dissatisfied: State government can reduce fines - Announced by Union Minister Nitin Gadkari

வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி: ‘அபராதத்தை மாநில அரசே குறைக்கலாம்’ - மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு

வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி: ‘அபராதத்தை மாநில அரசே குறைக்கலாம்’ - மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு
போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை மாநில அரசுகளே குறைத்துக்கொள்ளலாம் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் பேர் வரை விபத்தில் உயிரிழப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விபத்துகளுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே காரணம் என அறியப்படுகிறது.


எனவே இந்த விபத்துகளை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டப்படி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கடுமையான தண்டனையால் விபத்துகள் குறையும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்த புதிய சட்டம் கடந்த 1-ந்தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் டெல்லியில் மட்டும் 3,900 பேர் முதல் நாளிலேயே அபராதம் செலுத்தி இருந்தனர். இதனால் லட்சக்கணக்கான பணம் அபராதமாக வசூலாகி வருகிறது.

இந்த அபராத உயர்வுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த அபராதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இந்த சட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை.

இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் அறிவித்து உள்ளார்.

இது ஒருபுறமிருக்க புதிய மோட்டார் வாகன சட்ட நடவடிக்கைகளில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் குஜராத் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன.

இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவதை 3 மாதங்கள் தள்ளிவைத்துள்ள ஒடிசா அரசு, அதற்குள் வாகன ஓட்டிகள் புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு கடந்த வாரம் அறிவித்தது.

இதைப்போல புதிய சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தை மாற்றியமைத்து குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அபராத தொகை குறைக்கப்படும் எனவும், அது பற்றிய விவரங்கள் வருகிற 16-ந்தேதி அறிவிக்கப்படும் எனவும் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அந்தவகையில், ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.500 ஆக குறைக்க குஜராத் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மேலும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.5 ஆயிரம் என்பதை, இரு சக்கர வாகனம் ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், 4 சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.3 ஆயிரமாகவும் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த மாநிலங்களின் முடிவை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதைப்போல பிற மாநிலங்களும் தேவைப்பட்டால் போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை குறைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வாகன ஓட்டிகளிடம் அபராதத்தை பெற்று கஜானாவை நிரப்ப வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. இது ஒரு வருவாய் திட்டம் அல்ல. சாலை போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், விபத்துகளை குறைக்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மக்களின் உயிரை விட அபராதம்தான் முக்கியமா? 1½ லட்சம் பேரின் உயிரிழப்பை பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா? நீங்கள் விதிமீறலில் ஈடுபடாவிட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை.

எப்படியிருந்தாலும், இந்த அபராதம் குறித்து மாநில அரசுகளே மறு ஆய்வு செய்து கொள்ளலாம். அபராதத்தை குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் விரும்பினால், அதை மாநிலங்களே குறைத்துக்கொள்ளலாம். ஆனால் மக்களின் உயிர் காக்கப்பட வேண்டும்.

அபராத தொகையை மாநில அரசுகள் குறைக்க விரும்புவதால், மக்கள் இந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றோ, சட்டத்தை மதிக்கவில்லை என்றோ பொருளல்ல. இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் கடுமையான அபராதத்தை மாநில அரசுகளே குறைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பதன் மூலம், மாநில அரசுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப் படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை விதித்தனர்.
2. தலமலை அருகே, வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை
தலமலை அருகே வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.
3. சிக்னலில் நிற்கும் போது வாகன ஓட்டிகள் ‘ஹாரன்’ அடிப்பதை தடுக்க புதிய முயற்சி
சிக்னலில் நிற்கும் போது வாகன ஓட்டிகள் தேவையின்றி ஹாரன் அடிப்பதை தடுக்க மும்பை போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.