மாநில செய்திகள்

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட தடை + "||" + Theni District Dairy Producers Cooperative Society President  O. Raja, brother of O. Pannirselvam Prohibited to act

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக  ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட தடை
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அதில், தான் பழனிச்செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 17 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேலும் 13 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி 17 உறுப்பினர்கள் திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2ம் தேதி அவர்கள் பதவியேற்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதிமுகவை சேர்ந்தவர்களாகவே இருப்பதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது எனவும், எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் மனு குறித்து பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர், சங்கத்தின் தலைவர் ஓ.ராஜா உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.