மாநில செய்திகள்

பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா? அறிக்கை அளிக்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Is the plastic ban seriously enforced?

பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா? அறிக்கை அளிக்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா? அறிக்கை அளிக்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சிரஞ்சீவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சில நாட்கள் மட்டுமே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் தடையானது, அதிகாரிகளால் கண்காணிக்கப்படவில்லை. இதனால் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை முன்பை காட்டிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை அதிகப்படுத்தி வருகின்றன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் லாரி நிறுவனங்கள் மற்றும் தனியார் பஸ்கள் மூலம் கடத்தப்படுகின்றன. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இதை கண்டுகொள்வது இல்லை.

அதிகரிக்கும் பயன்பாடு

உதாரணமாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் விவசாய பொருட்கள் மதிப்பிழக்கின்றன. குறிப்பாக மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவற்றின் விற்பனை நலிவடைந்து உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தும் அரசாணையை தீவிரமாக கடைபிடித்து, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, “தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருந்தபோதும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதற்கான தடையை தீவிரமாக அமல்படுத்தி, கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்கள்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிளாஸ்டிக் தடை அரசாணையை அமல்படுத்தியது குறித்தும், அதன் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.