மாநில செய்திகள்

மேட்டூரில் இருந்து அதிக அளவு திறந்தபோதிலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை கடலில் கலந்து வீணாகும் 2 டி.எம்.சி. நீர் + "||" + Farmers suffer due to lack of water

மேட்டூரில் இருந்து அதிக அளவு திறந்தபோதிலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை கடலில் கலந்து வீணாகும் 2 டி.எம்.சி. நீர்

மேட்டூரில் இருந்து அதிக அளவு திறந்தபோதிலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை கடலில் கலந்து வீணாகும் 2 டி.எம்.சி. நீர்
மேட்டூரில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்தபோதிலும் கடைமடை பகுதிகளுக்கு நீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், 

மேட்டூரில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்தபோதிலும் கடைமடை பகுதிகளுக்கு நீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கொள்ளிடம் வழியாக கடந்த 2 நாட்களாக 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 13-ந்தேதி திறக்கப்பட்டது.

முதலில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்பு தண்ணீர் திறந்து விடும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கர்நாடகம், கேரளாவில் மழை தொடர்ந்ததால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 7-ந்தேதி மேட்டூர் அணை நிரம்பியதால் அங்கு இருந்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் 506 கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

கடைமடை சென்றடையவில்லை

காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லணைக்கு கீழே காவிரி, குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு உள்பட 36 கிளை ஆறுகள் பாய்கின்றன. இந்த கிளை ஆறுகளில் தண்ணீர் தற்போது கடைமடை பகுதி வரை சென்றுள்ளன.

இந்த ஆறுகளில் இருந்து பெரும்பாலான பாசன வாய்க்கால்களில் திறக்கப்பட்டாலும், இன்னும் ஒருசில பகுதிகளில் வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடையவில்லை. தஞ்சை மாவட்டத்தில் வடகாடு, வெட்டிக்காடு பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பெரிய பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்லவில்லை.

விவசாயிகள் வேதனை

இதேபோல் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் சீர்காழி, கொள்ளிடம், பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களிலும், சீர்காழி பகுதியில் உள்ள கழுமலையாறு வாய்க்காலில் இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. கொள்ளிடம் பகுதியில் உள்ள பூதுமண்ணியாற்றில் உள்ள மாதானம் வாய்க்காலிலும் இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடையை சென்றடையவில்லை. அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும் தண்ணீர் கடைமடை பகுதிகளை சென்று அடையாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகிறது

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதிகளில் அனைத்து கிளை ஆறுகளிலும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்து விட்டது. தற்போது பாசன வாய்க்கால்களில் கடைமடை பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 694 ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிருநாளில் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்து விடும்.

கொள்ளிடத்தில் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டாலும் வீராணம் ஏரி, பாசனத்துக்கு திறக்கப்பட்டது, பல்வேறு மாவட்டங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் தண்ணீர் எடுத்தது போக தற்போது கடந்த 2 நாட்களாக 2 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.