மாநில செய்திகள்

ம.தி.மு.க. மாநாட்டை 15-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் வைகோ அறிவிப்பு + "||" + Vaiko announces that the conference will be launched by MK Stalin on the 15th

ம.தி.மு.க. மாநாட்டை 15-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. மாநாட்டை 15-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் வைகோ அறிவிப்பு
சென்னையில் 15-ந் தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை, 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா மாநாடு, மிக எழுச்சியாக சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 15-ந் தேதியன்று நடைபெறுகிறது. தமிழக அரசியலிலும், இந்திய அரசியல் அரங்கிலும் மிக முக்கியமான காலகட்டத்தில், அண்ணா ஏற்றி வைத்த அணையாச் சுடர், மாநில சுயாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்ட காரணத்தினாலேயே பல்வேறு தேசிய இனங்களின் கலாசார அடையாளத்தை அழித்து, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறித்து அடக்கி ஆள நினைக்கின்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகள் பலம்பெற வேண்டிய வரலாற்று கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, நாசப்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும். அந்த கடமையை நிறைவேற்ற களம் அமைக்க வேண்டியது அண்ணா வழியில் நடைபோடும் ம.தி.மு.க.வின் அரசியல் பணியாகும். அதற்கு கட்டியம் கூறத்தக்க வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா மாநாட்டை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

கி.வீரமணி

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பங்கேற்கிறார். முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதியும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டின் நண்பகல் அமர்வில் நிறைவுரை ஆற்றுகிறார்.

ம.தி.மு.க. வரலாற்றில், மற்றொரு மைல் கல்லாக அமையப்போகிற இந்த மாநாட்டிற்கு கட்சித் தொண்டர்கள் அணிதிரண்டு வாருங்கள். தமிழ் பெருமக்களே இளைஞர்களே, மாணவர்களே மாநாட்டுக்கு வாரீர் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.