மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணம்: குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க நீதிபதிகள் அதிரடி உத்தரவு + "||" + Subasree's death case Rs. 5 lakh as compensationJudges Order

சுபஸ்ரீ மரணம்: குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க நீதிபதிகள் அதிரடி உத்தரவு

சுபஸ்ரீ மரணம்: குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க நீதிபதிகள் அதிரடி உத்தரவு
பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபாஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்து சுபாஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்ற போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரமும் ‘பேனர்’கள் வைத்து இருந்தனர்.

சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபாஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் கோவிலம்பாக்கம் நோக்கி வந்த தண்ணீர் லாரி சுபாஸ்ரீ மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபாஸ்ரீ, அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், பள்ளிக்கரணை போலீசாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமார் அரை மணிநேரமாக சுபாஸ்ரீயின் உடல் சாலையிலேயே கிடந்தது.

இதையடுத்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பலியான சுபாஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.

இந்த விசாரணையில் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது. உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.

பேனர் வைத்தால் தான் விஐபிக்கள் வருவார்களா? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். நீதிமன்ற உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். பேனர் வைக்க மாட்டோம் என முதல்-அமைச்சரே அறிக்கை விடலாமே!

எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக  அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்சினை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மதியத்திற்குள் அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து மதியம் நடந்த விசாரணையில், பேனர் தொடர்பாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர், பேனர் வைக்க கூடாது என அரசு மற்றும் பிற கட்சிகள் சார்பாக அறிக்கை அளித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது என கூறினார்.

நீதிபதிகள், பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சியினர் முன்பே முடிவெடுத்திருந்தால் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைத்தால் தான் அமைச்சர்கள் வருவார்களா?

2 மணி அளவில் நடந்த விபத்திற்கு 6 மணிக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வளவு அலட்சியம் ஏன். பேனரில் உள்ள வண்ணங்கள் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்,  பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும்.

மேலும் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்த விபத்தில், இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மு.க.ஸ்டாலின் உடனடியாக அறிக்கை  வெளியிட்டார் அதில், பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது. அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே  விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை அதிமுக தொண்டர்கள் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிமுக, திமுகவை தொடர்ந்து பிற அரசியல் கட்சித் தலைவர்களும் பேனர்கள் வைக்க வேண்டாம் என தங்கள் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளனர்.