உலக செய்திகள்

அமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார் + "||" + Trump attends PM Modi's event in the US

அமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்

அமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்
அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், டிரம்ப் கலந்து கொள்கிறார். 50 ஆயிரம் அமெரிக்க இந்தியர்களிடையே இருவரும் கூட்டாக பேசுகிறார்கள்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. டெக்சாஸ் இந்தியா கூட்டமைப்பு என்ற புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.


அங்குள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் ஆன பிறகு, அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேசும் 3-வது பிரமாண்ட நிகழ்ச்சி இதுவாகும். இதற்கு முன்பு, 2014-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாடிசன் சதுக்கத்திலும், 2016-ம் ஆண்டு சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் அவர் பேசிய கூட்டங்கள், மிகவும் வரவேற்பை பெற்றன. அந்த கூட்டங்களில் தலா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், மோடி பங்கேற்கும் ஹூஸ்டன் நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் பங்கேற்கிறார். இதை வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புத்துறை மந்திரி ஸ்டெபானி கிரிஷம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியும், ஜனாதிபதி டிரம்பும் கூட்டாக பங்கேற்கும் கூட்டம், இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவை மீண்டும் உறுதிப்படுத்த வாய்ப்பாக அமையும். தங்களின் எரிசக்தி மற்றும் வர்த்தக உறவை வலுவாக்குவதற்கான வழிகளை ஆராய்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டில் ஜி7 நாடுகள் மாநாட்டின் இடையே டிரம்பை சந்தித்த மோடி, இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பை டிரம்ப் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தனது பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கும், ரகசிய போலீஸ் படையினருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், அமெரிக்காவில் உள்ள ஓரிடத்தில் இவ்வளவு அதிகமான அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பேசுவது, இதுவே முதல்முறை ஆகும்.

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது, நியூஜெர்சியில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசியுள்ளார். தேர்தல் நேரத்தில் முழுக்க முழுக்க அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பேசிய ஒரே ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் மட்டுமே ஆவார்.

பிரதமர் மோடி-டிரம்ப் பங்கேற்கும் கூட்டத்தில், டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரிக் அப்போட், நியூயார்க் கவர்னர் எலியட் ஏங்கல் மற்றும் 60 அமெரிக்க எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள் கிறார்கள்.

இந்த கூட்டத்தில், மோடியும், டிரம்பும் நடப்பாண்டு 3-வது தடவையாக சந்திக்கிறார்கள். இதற்கு முன்பு, கடந்த ஜூன் மாதம் ஜப்பானில் ஜி20 நாடுகள் மாநாட்டின் இடையிலும், கடந்த ஆகஸ்டு மாதம் பிரான்ஸ் நாட்டில் ஜி7 நாடுகள் மாநாட்டின் இடையிலும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.

இதற்கிடையே, தனது கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி டிரம்ப் எங்களுடன் இணைவது விசேஷ மரியாதைக்குரியது. அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் இணைந்து அவரை வரவேற்க ஆவலாக இருக்கிறேன்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான விசேஷ நட்புறவை இது உணர்த்துகிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கை அங்கீகரிப்பதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்த்தன் சிரிங்க்லா, “இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, முன்எப்போதும் நடக்காதது. இருநாட்டு மக்கள் இடையிலான வலிமையான பிணைப்பை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி, இந்திய-அமெரிக்க உறவில் புதிய நெருக்கத்தை உருவாக்கி உள்ளது. உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுவது, உலகத்திலேயே இதுதான் முதல்முறை என்று கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா
அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு போலீசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
2. அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் திருப்பம்: 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்
அமெரிக்காவில் தீவிரமாகும் போராட்டம் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் போலீசார் மண்டியிட்டு வருகின்றனர்.
4. அமெரிக்காவில் தொடரும் போராட்டம் : வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் - டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை
பனிப்போரில் அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.