மாநில செய்திகள்

கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல்:கொலை முயற்சி வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது + "||" + In case of attempted murder MDMK District secretary arrested

கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல்:கொலை முயற்சி வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல்:கொலை முயற்சி வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது
ம.தி.மு.க. கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயரை தாக்கிய தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கடந்த 15-ந் தேதி நடந்தது. இதையொட்டி சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ம.தி.மு.க. கட்சியின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்த ம.தி.மு.க. கொடி மற்றும் தோரணங்களை, சென்னை அடையாறு மாநகராட்சி மண்டல என்ஜினீயர் வரதராஜன் மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கொடிகள், தோரணங்களை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயர் வரதராஜன் மீதும், ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கொலை முயற்சி வழக்கு

இந்த தாக்குதலில் வரதராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக வரதராஜன், சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சைதாப்பேட்டை போலீசார் ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மீது கொலைமுயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது

மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியில் என்ஜினீயர் வரதராஜனை தாக்கிய ம.தி.மு.க.வினர் யார், யார்? என்று போலீசார் அடையாளம் கண்டனர்.

அதன் அடிப்படையில் தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி (வயது 50) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக அவரை நீதிமன்ற காவலில் போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ம.தி.மு.க. பிரமுகர் பூவராகவன் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.