உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தலைமை பாதுகாப்பு மந்திரி மீது மர்ம நபர்கள் தாக்குதல் + "||" + Indonesia's security minister Wiranto hurt after stabbing attack

இந்தோனேசியாவில் தலைமை பாதுகாப்பு மந்திரி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

இந்தோனேசியாவில் தலைமை பாதுகாப்பு மந்திரி மீது மர்ம நபர்கள் தாக்குதல்
இந்தோனேசியா நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரியை குறிவைத்து மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா,

இந்தோனேசியா நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரி விரண்டோ (72). இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். 

இந்நிலையில், அந்நாட்டின் பன்டென் மாகாணத்தில் உள்ள பெண்டிக்லங் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விரண்டோ பகுதிக்கு வந்தார். அப்போது தலைமை பாதுகாப்பு மந்திரியை வரவேற்க ஏராளமான மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் தனது காரை விட்டு இறங்கிய விரண்டோவை வரவேற்க அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் இரண்டு பேர் (ஆண் மற்றும் பெண்) திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சரமாரியாக விரண்டோவை குத்தினர். மேலும், தாக்குதலை தடுக்க சென்ற மாவட்ட காவல் ஆணையர் உள்பட பாதுகாப்பு அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கினர். இந்த கத்திக்குத்து தாக்குதலில் நிலைகுலைந்த விரண்டோ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். 

இதனையடுத்து படுகாயமடைந்த விரண்டோவை மீட்ட பாதுகாப்பு படையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மேலும், இந்த கோர தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.