மாநில செய்திகள்

ரஜினி தலைமையிலான கட்சி 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என தகவல் + "||" + Rajini-led party to meet 2021 assembly election

ரஜினி தலைமையிலான கட்சி 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என தகவல்

ரஜினி தலைமையிலான கட்சி 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என தகவல்
ரஜினி தலைமையிலான கட்சி 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சுமார் 25 ஆண்டு கால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப் புள்ளி வைத்தார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

தனிக்கட்சி தொடங்கி  234 தொகுதிகளிலும்  நிற்கப் போவதாக அறிவித்தார். அதன் பின் அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.  தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார்.

உறுப்பினர் சேர்க்கையையும், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்  ரஜினி.  இந்த படத்தில், ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசை அமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு அமைக்கிறார்.

2020 பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள்ளனர். பாராளுமன்ற தேர்தலின் போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் போலீஸ் வேடத்தில்
நடிக்கும் தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். தேர்தல் நாள் அன்று சென்னைக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பிய ரஜினி பின்னர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் மீண்டும் தர்பார் படப்பிடிப்புக்கே திரும்பினார்.

3 மாத கால படப்பிடிப்புக்கு பின்னர் கடந்த வாரம் சென்னை திரும்பினார். ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12ந்தேதி வருகிறது. அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகள் முழுமை அடைவதால் இந்த பிறந்த நாளுக்கு ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியின் 168-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தை ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய, சிவா எழுதி இயக்குகிறார். இந்த படம் அடுத்த மாதம் தொடங்கி வரும் கோடை விடுமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது மூலம் 70 வயதாகும் ரஜினி அரசியலுக்கு வருவது இன்னும் தாமதமாகி உள்ளது. எனவே அடுத்த ஆண்டும் ரஜினியின் தனிக்கட்சி தொடக்கத்திற்காக ரசிகர்களும் கட்சி நிர்வாகி களும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஜினியின் தனிக்கட்சி தாமதம் பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:-

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ரஜினிக்கு பெரிய ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ அளிக்கவில்லை. இதுதான் நடக்கும் என்று அவருக்கு முன்பே தெரியும். பா.ஜனதாவின் வெற்றி என்பது ரஜினி எதிர்பார்த்த ஒன்று தான். தேர்தலுக்கு முன்பு கூட பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நதிநீர் இணைப்பு குறித்த வாக்குறுதியை ரஜினி வரவேற்றிருந்தார்.

தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. இந்த ஆட்சி தப்பித்துவிட்டது. பலமுறை தள்ளி போடப்பட்ட உள்ளாட்சி தேர்தலையும் அடுத்த சில மாதங்களில் நடத்த போவதாக அரசு தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் எங்கள் இலக்கு இல்லை என்று ரஜினி முன்பே சொல்லிவிட்டார். ஆனால், 2021 தேர்தலில் எங்க கட்சி போட்டியிடுவது உறுதி. பொதுவாக எல்லாக் கட்சிகளிலுமே தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகே பூத் கமிட்டிகள் அமைக்கப்படும். ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தில் மட்டும் அந்த பூத் கமிட்டிகளுக்கே ஆட்கள் தயாராகிவிட்டார்கள்.

மன்ற நிர்வாகிகள் ரகசியமாக வேலை பார்த்து வருகிறார்கள் என்பது உண்மை. ரஜினி தலைமையிலான கட்சி, 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்ற கேள்விக்கே வேலை இல்லை.  அவர் எங்களுக்கு முன்பே அதை தெளிவுபடுத்தி விட்டார். ஆகஸ்டு 2020-ல் தான் கட்சி உதயம் ஆகும். ஒருவேளை 2021-ம் ஆண்டுக்கு முன்பே தேர்தல் வந்தால் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கட்சி தொடங்கப்படும். அதுவரை ரஜினி நடித்துக்கொண்டு தான் இருப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.