மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள் + "||" + In Nanguneri, Vikravandi Vol Leaders Hurricane Propaganda Collecting votes

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்
இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொண்டர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
சென்னை,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக் கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்கி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நா.புகழேந்தியும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டி யிடுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய இருக்கிறது.

இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீதி வீதியாக சென்று மும்முரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் இரு தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாங்குநேரியிலும், ஓ.பன்னீர்செல்வம் விக்கிரவாண்டி தொகுதியிலும் வாக்கு சேகரித்தனர்.

எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக திறந்தவெளி வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் 16 மற்றும் 17-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும், 18-ந் தேதி மீண்டும் நாங்குநேரி தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

இதேபோல், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விக்கிரவாண்டி தொகுதியிலும், நாளை (செவ்வாய்க் கிழமை), நாளை மறுநாள் (16-ந் தேதி) மற்றும் 17-ந் தேதி நாங்குநேரி தொகுதியிலும் வீதி வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 18-ந் தேதி மீண்டும் அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அவர் நாளையும், நாளை மறுநாளும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வுக்கு ஆதரவாக அவற்றின் கூட்டணி கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கட் கிழமை) விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல், நாளை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இங்கு பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாளையும், நாளை மறுநாளும் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நாங்குநேரி தொகுதியில் இன்று, நாளை மற்றும் 18-ந் தேதியும், விக்கிரவாண்டி தொகுதியில் 17-ந் தேதியும், புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் 16-ந் தேதியும் வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் முகாமிட்டுள்ளதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது.