மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் கூறியது தேவையற்ற கருத்து - கி.வீரமணி பேட்டி + "||" + Seeman's comment on Rajiv Gandhi's death is unnecessary - Interview with K Veeramani

ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் கூறியது தேவையற்ற கருத்து - கி.வீரமணி பேட்டி

ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் கூறியது தேவையற்ற கருத்து - கி.வீரமணி பேட்டி
ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் கூறியது தேவையற்ற கருத்து என்று கி.வீரமணி தெரிவித்தார்.
சென்னை,

அமெரிக்காவில் சர்வதேச மனிதநேய சுயமரியாதை மாநாட்டை, அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்தியது. மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கி.வீரமணிக்கு பாராட்டு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடந்தது. திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில் நடந்த விழாவில், கி.வீரமணிக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

பாராட்டு விழாவை தொடர்ந்து கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமத்துவ நாடான அமெரிக்காவிலேயே தற்போது சாதி பிரச்சினையும், இடஒதுக்கீடு பிரச்சினையும் நோய் போல பரவி கிடக்கிறது. இந்த சாதி பிரச்சினை எனும் நோய்க்கான ஒரே தடுப்பூசி பெரியார் தான். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா தாண்டி உலக நாடுகளிலும் பெரியார் கொள்கை கோலோச்சுகிறது என்பதற்கான அடையாளம் தான் எனக்கு கிடைத்த விருது. அடுத்த மனிதநேய சுயமரியாதை மாநாடு 2021-ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை தென் ஆப்பிரிக்காவில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் சர்ச்சை கருத்து கூறியிருக்கிறாரே?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து கி.வீரமணி கூறியதாவது:-

சீமான் கூறியது தேவையற்ற கருத்து. ‘ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்’ என்று விடுதலைப்புலிகள் அமைப்பே பகிரங்கமாக சொல்லவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட இதை துன்பியல் சம்பவம் என்றுதான் குறிப்பிட்டாரே தவிர, வெளிப்படையான கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் சீமான் இந்த கருத்தை எப்படி தெரிவித்தார்?

பொதுமக்கள் கவனத்தை கவருவதற்காக சர்ச்சைக்குரிய வகையில் சீமான் கருத்து கூறுவது தவறு. தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட்டு தேவையில்லாதவற்றை பேசி அரசியல் தலைவராகி விடலாம் என்று நினைக்கக்கூடாது. அரசியலில் குறுக்கு வழி தவறான முடிவையே ஏற்படுத்திவிடும்.

தங்கள் வாழ்வு மலராதா? என்ற ஏக்கத்தில் ஈழ தமிழர்கள் இருக்கும் வேளையில், பல ஆண்டுகளாக சிறையில் தவித்துக்கொண்டு இருக்கும் 7 தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில் சீமானின் இந்த பேச்சு வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் 21-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் கி.வீரமணி பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி திருச்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
2. ‘நீட்’ தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது - திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
‘நீட்’ தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது என்று திண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
3. எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் என நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி கூறினார்.
4. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் கி.வீரமணி பேச்சு
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
5. நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது கி.வீரமணி பேச்சு
நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு மக்களிடம் இரட்டை வேடம் போடுகிறது என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கூறினார்.