மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி: வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம், தொண்டர்கள் இல்லாததால் சத்தியமூர்த்தி பவன் காலியானது + "||" + ADMK to win by-election Success Lack of volunteers Sathyamoorthy Bhawan is empty

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி: வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம், தொண்டர்கள் இல்லாததால் சத்தியமூர்த்தி பவன் காலியானது

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி: வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம், தொண்டர்கள் இல்லாததால் சத்தியமூர்த்தி பவன் காலியானது
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதால் தொண்டர்கள் இல்லாமல் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று சத்தியமூர்த்திபவனும் காலியாக இருந்தது.
சென்னை,

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தங்களிடம் இருந்த இரு தொகுதிகளையும் அ.தி.மு.க.விடம் பறிகொடுத்தது. இந்த படுதோல்வி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை அளித்து உள்ளது.


இதன் வெளிப்பாடாகவே சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக வாக்கு எண்ணிக்கை தினத்தன்று கட்சி தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கூடுவது வழக்கம். அந்த வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியதும் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பின்தங்கியே இருந்ததால் தொண்டர்கள் இன்றி சென்னை தேனாம்பேட்டையில் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.

வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்களும் வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். தொண்டர்கள் சிலரும் அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர்.

அவர்கள், அண்ணா அறிவாலய வளாகத்துக்குள் உள்ள இருக்கையில் சோகமாக அமர்ந்திருந்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க தொடங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை தெரிவித்தனர். ஒருவர் தெரிவித்த கருத்தை இன்னொருவர் மறுப்பது, குறுக்கிட்டு பேசுவது என விவாதம் சூடுபிடித்தது.

ஒரு கட்டத்தில் தி.மு.க. தொண்டர் ஒருவர், ‘நாங்குநேரி தொகுதியை பொறுத்தமட்டில் நமது கூட்டணியே உருவாக்கி கொண்ட தேவையில்லாத தேர்தல். பொதுத்தேர்தலில் நமக்கு வாக்காளர்கள் வெற்றியை தந்தனர். அந்த வெற்றியை நாம் தக்க வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து நமது கூட்டணி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் தற்போது அந்த தொகுதியை இழக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்’ என்று கூறி புலம்பினார்.

அங்கிருந்த மற்றொரு தொண்டர், ‘இடைத்தேர்தல் முடிவு எப்போதும் ஆளும்கட்சிக்கு சாதகமாவே இருக்கும். பொதுத்தேர்தலில் நாம் (தி.மு.க. கூட்டணி) நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்று அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.

தொண்டர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து டீ மற்றும் சுண்டல் வியாபாரிகளும் அண்ணா அறிவாலயத்தை சுற்றி வந்தனர். தொண்டர்கள் கூட்டம் இல்லாததால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதேபோன்று, தி.மு.க. கொடி, படங்கள் விற்பனை செய்யும் ரோட்டோர கடையும் அண்ணா அறிவாலயத்துக்குள் அமைக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் யாரும் வராததால் ஏமாற்றத்துடன் கொடி, பட வியாபாரியும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதேபோன்று பத்திரிகையாளர்களும் குவிந்திருந்தனர். தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் யாரும் வராததால் அவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பின்தங்கியே இருந்தார்.

தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வரவில்லை. ஒரு சில தொண்டர்கள் மட்டும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

அவர்களும், காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றனர். இதனால், சத்தியமூர்த்தி பவனும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.