மராட்டிய பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 தொகுதிகளும் கிடைத்தன.
தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் 44 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதிக இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்று உள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 200க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என பா.ஜ.க. கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது.
இதனிடையே, தெற்கு மும்பையின் விதான் பவனில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடந்தது. மராட்டிய பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட 105 புதிய எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் கட்சியின் துணை தலைவர் அவினாஷ் ராய் கண்ணா ஆகியோர் மத்திய கண்காணிப்பு அதிகாரிகளாக இருந்தனர்.
கட்சி கூட்டத்தில் வேறு யாருடைய பெயரும் முன்மொழியப்படவில்லை. இதனால் மராட்டிய பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கூட்ட முடிவில், தன் மீது நம்பிக்கை வைத்து மற்றும் மராட்டியத்திற்கு சேவை செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கியதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பட்னாவிஸ் நன்றி தெரிவித்து கொண்டார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்து உள்ளார்.