தேசிய செய்திகள்

வருமான வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லை - பொருளாதார மந்தநிலையால் மத்திய அரசு முடிவு + "||" + There is no chance of a reduction in income tax - Central government decision due to economic recession

வருமான வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லை - பொருளாதார மந்தநிலையால் மத்திய அரசு முடிவு

வருமான வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லை - பொருளாதார மந்தநிலையால் மத்திய அரசு முடிவு
ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியை மத்திய அரசு குறைக்கப் போவதில்லை என்று தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த ஆண்டு மீண்டும் பதவி ஏற்ற பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ.5 லட்சம்வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது.


ஆனால், ரூ.2 கோடிக்கு மேல், வரி விதிப்புக்கு உட்பட்ட வருமானம் கொண்ட பணக்காரர்களுக்கு கூடுதல் வரி (சர்சார்ஜ்) உயர்த்தப்பட்டது. அதனால், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிவரை வருமானம் ஈட்டுபவர்களுக்கான வருமான வரி 39 சதவீதமாக உயர்ந்தது. ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கான வருமான வரி 42.74 சதவீதமாக உயர்ந்தது.

இதற்கிடையே, ஓரிரு மாதங்களுக்கு முன்பு, கடுமையான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது. மோட்டார் வாகன உற்பத்தி தொழில் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டன.

அவற்றுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, கம்பெனி வரி விகிதம், 10 சதவீத புள்ளிகள் குறைக்கப்பட்டது. இது, கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சலுகை ஆகும். இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

பெருநிறுவனங்களுக்கு கம்பெனி வரி குறைக்கப்பட்டதால், பணக்கார தனிநபர்களுக்கான வருமான வரி விகிதமும் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களுக்கு வருமான வரி குறைக்கும் எண்ணத்தில் மத்திய அரசு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

ஏனென்றால், பொருளாதார மந்தநிலை ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு புறம், ஆயுஷ்மான் பாரத், நூறு நாள் வேலைத்திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் போன்ற சமூகநல திட்டங்களுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. ஆனால், வரி வருவாயோ குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டும், நேரடி வரி வசூல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கையும் எட்டுவது சந்தேகமாக உள்ளது.

எனவே, ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் பணக்காரர்களுக்கு வருமான வரி குறைக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.