உலக செய்திகள்

கர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, கட்டணம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு + "||" + Kartarpur pilgrims will not need a passport, no fee on opening day: Pak PM Imran Khan

கர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, கட்டணம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

கர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, கட்டணம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர்  அறிவிப்பு
கர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை மற்றும் தொடக்க நாளில் கட்டணம் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்து உள்ளார்.
இஸ்லாமாபாத்

சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார். ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பவுர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது. குருநானக்  தனது வாழ்க்கையின் கடைசி 18 ஆண்டுகளை  கர்தார்பூர் குருத்வாராவில் கழித்ததிலிருந்து  சீக்கிய மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நவம்பர் 12 ஆம் தேதி குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு கர்தார்பூர் நடைபாதை நவம்பர் 9 ஆம் தேதி திறக்கப்படும்.

குருநானக் தேவின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு சர்வதேச எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூர் நடைபாதையை திறக்க இரு தரப்பினரும் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டனர்.

கடந்த வாரம்  கர்தார்பூர் நடைபாதையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த நடைபாதை பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சன்னதியை பாகிஸ்தானின் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூருடன் இணைக்கிறது.

கர்தார்பூர்   செல்லும் யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் ரூ. 1420 கட்டணமாக வசூலித்து வந்தது. இந்தியா இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி கர்தார்பூர் நடைபாதையின் தொடக்க நாளிலும், நவம்பர் 12 ஆம் தேதி குரு நானக்கின்  550 வது ஜெயந்திக்கு  வரும் இந்திய யாத்ரீகர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து இம்ரான்கான் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

 யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை மட்டுமே போதுமானது. பயணத்திற்கு இனி பத்து நாட்களுக்கு முன்பே யாத்ரீகர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. தொடக்க நாள் மற்றும் குருஜியின் 550 வது பிறந்த நாளில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறி உள்ளார்.