மாநில செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பண நாயகத்தின் மூலம் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + Election in ADMK Has been successful The accusation of MG Stalin

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பண நாயகத்தின் மூலம் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பண நாயகத்தின் மூலம் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பண நாயகத்தின் மூலம் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். முதல்-அமைச்சரைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ ஏதாவது சொன்னால், இப்போது இருக்கும் முதல்-அமைச்சருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் நாம், ஆட்சியில் நடைபெறக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை ஆகும். நான் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டபோது, ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். அப்போதே நான் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவராக முதன் முதலில் பேசியபோது சொன்னேன்; “தி.மு.க.வை பொறுத்தவரையில் 1.1 சதவீத வித்தியாசத்தில்தான் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆட்சிக்கு வரவில்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்திருக்கிறோம். எதிரிக்கட்சியாக இருக்கமாட்டோம்; எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் செயல்படுவோம்” என்று அன்றைக்கே சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவே, அரசின் குறைபாடுகள் - அவலட்சணங்கள் - அரசு, நாட்டு மக்களுக்குச்செய்து கொண்டிருக்கும் துரோகங்கள் என அத்தனையும் உங்களுக்கே நன்றாகத் தெரியும். இதை ஆட்சி என்று சொல்லமுடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சியை கேலியாக, விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை; “இது எடப்பாடி ஆட்சியல்ல, எடுபிடி ஆட்சி” என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதற்கு உதாரணங்கள் எத்தனையோ உண்டு.

இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு நீங்கள் வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி; பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி; அது எந்தத் தேர்தலாக இருந்தாலும் தி.மு.க.வை பெரு வெற்றி பெறச்செய்ய வேண்டும். இப்போது இந்த 2 இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஜனநாயகத்தை நம்பாமல், பணநாயகத்தை நம்பியிருக்கலாம்; பண நாயகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இது தொடராது; தொடர்வதற்கு வாய்ப்புக் கிடையாது.

பொதுத்தேர்தலை பொறுத்த வரையில், மக்கள் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகமும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை ஒரு சரித்திர சாதனை படைத்த வெற்றியை நீங்கள் பெற்றுத் தந்தீர்கள். அந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், இப்போது நடந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் பொய் சொல்லி ஓட்டுகளைப்பெற்றார்கள்.

குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டுவதுபோல், மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்றார்கள். அதைவிடக் கேவலமாக, “பொதுமக்களுக்கு, வாக்காளர்களுக்கு மிட்டாய் கொடுத்து எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது” என்று சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டது என்று கூறியவர்களை இப்போது நான் கேட்கிறேன்; இப்போது 2 இடைத்தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் என்ன கொடுத்தீர்கள்?. அல்வா கொடுத்தீர்களா?. இதுதான் என்னுடைய கேள்வி. இப்போது நான் அதையே திருப்பிச் சொல்லிட முடியாதா?.

பொய் சொல்லி 2 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது அல்ல உண்மை. பணம் கொடுத்து, பணநாயகத்தின் மூலமாக இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பே கிடையாது. எனவே, வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க., ஒரு மிகப்பெரிய வெற்றியைப்பெற, நீங்கள் அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.