தேசிய செய்திகள்

நன்றாக இருப்பதால் ப.சிதம்பரத்தை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Well, there is no need to treat PC Chidambaram in hospital - Order of Delhi HighCourt

நன்றாக இருப்பதால் ப.சிதம்பரத்தை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

நன்றாக இருப்பதால் ப.சிதம்பரத்தை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ப.சிதம்பரம் நன்றாக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கடந்த 16-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவிட்டார். இதனால் அவர் மீண்டும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் வருகிற 4-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கெயித், எய்ம்ஸ் மருத்துவ மனை டாக்டர்கள் குழுவை அமைத்து ப.சிதம்பரத்தின் உடல்நிலையை ஆய்வு செய்து மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், நீதிபதி சுரேஷ் குமார் கெயித் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு தரப்பில் ஒரு டாக்டர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி ப.சிதம்பரத்தின் உடல்நிலை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தார்.

அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அந்த அறிக்கையில் உள்ள விவரங்களை கோர்ட்டில் வாசித்து காட்டினார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ப.சிதம்பரத்துக்கு, கிருமிகள் நீக்கப்பட்ட தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை. அவருக்கு தற்போது தேவைப்படுவது சுத்தமான, ஆரோக்கியமான சூழல். கொசு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு கொசுவலை பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வீட்டில் சமைத்த உணவு ஆகியவை வழங்கவேண்டும். அவருக்கு முக கவசமும் (மாஸ்க்) வழங்க வேண்டும். அவர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றிய பகுதிகளை ஒரு நாளைக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

வாராந்திர அடிப்படையில் அவருக்கு ரத்த பரிசோதனை நடத்த வேண்டும். அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஸ்டீராய்டு மருந்துகளை அவர் உட்கொள்ள வேண்டும்.

கிருமிகள் நீக்கப்பட்ட தனி வார்டு (ஸ்டெரைல் ரூம்) என்பது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. ப.சிதம்பரத்துக்கு வெளிநோயாளியாக சிகிச்சை அளித்தால் போதும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

வாசித்து முடித்ததும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ப.சிதம்பரத்தை இன்று (அதாவது நேற்று) காலையில் நேரடியாக பரிசோதித்து இந்த அறிக்கையை வழங்கி இருப்பதாக துஷார் மேத்தா கூறினார்.

இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கெயித், ப.சிதம்பரம் நன்றாக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க தேவை இல்லை என்று உத்தரவிட்டார்.

மேலும், “சிறையில் ப.சிதம்பரத்துக்கு கொசுவலை வழங்க வேண்டும். அவருடைய அறையை சுத்தமாக வைக்க வேண்டும். அவருக்கு முக கவசம் வழங்குவதோடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்க வேண்டும். மூன்று வேளையும் வீட்டு உணவு வழங்க வேண்டும். வாரம் ஒருமுறை அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். புறநோயாளியாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த வசதிகளை திகார் சிறை சூப்பிரண்டு செய்து கொடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், “தங்கள் தரப்பில் மேற்கொண்டு கோரிக்கை எதுவும் விடுக்க விரும்பவில்லை” என்றார்.

இதைத்தொடர்ந்து, இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் ஜப்பான் நிதிக் குழுவினர் ஆய்வு
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் நேற்று ஜப்பான் நிதிக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அடிக்கல் நாட்டி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எப்போது கட்டுமானப்பணி தொடங்கும் என்று தெரியாத நிலையே நீடிக்கிறது.
2. ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு புத்துயிர் பெற்றது
ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றது
3. டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்
டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
4. ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு: நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசை அறிவிக்கும் அபாய ஒலி - ப.சிதம்பரம்
ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
5. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்
2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.