தேசிய செய்திகள்

டெல்லி கோர்ட்டில் போலீசார்- வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு + "||" + A scuffle has broken out between Delhi Police and lawyers at Tis Hazari court.

டெல்லி கோர்ட்டில் போலீசார்- வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு

டெல்லி கோர்ட்டில் போலீசார்- வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு
டெல்லி கோர்ட்டில் போலீசார்-வக்கீல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டு நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது குற்றவாளிகளை ஏற்றி வந்த சிறை வாகனம் மீது வக்கீல் ஒருவரின் கார் மோதியது. இதனால் சிறை வாகனத்தில் இருந்த போலீசாருக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.


இதையடுத்து போலீசார் அந்த வக்கீலை ஒரு அறையில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அவரை விடுவிப்பதற்காக கோர்ட்டில் இருந்த நீதிபதிகள் 8 பேர் சென்றனர். இருப்பினும் நீதிபதிகளை உள்ளே அனுமதிக்க மறுத்த போலீசார் அந்த வக்கீலை விடுவிக்கவில்லை. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு சிறை வைக்கப்பட்ட வக்கீல் விடுவிக்கப்பட்டார்.

போலீசாரின் தாக்குதலை கண்டித்து கோர்ட்டுக்கு வெளியே வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் துப்பாக்கி குண்டு பட்டு காயம் அடைந்த வக்கீல் ரஞ்சித்சிங் மாலிக் என்பவர் அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை போலீசார் மறுத்தனர்.

வக்கீல்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு கலவரத்தடுப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அப்போது போலீஸ் வாகனம் மற்றும் 8 மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், 8 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த மோதலால் கோர்ட்டு வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஒரு வழியாக போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் 10 போலீசார் மற்றும் பல வக்கீல் கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு டெல்லி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வக்கீல்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) வக்கீல்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வக்கீல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா கட்சி நிர்வாகிகளுடன் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வக்கீல்கள் மீதான தாக்குதலின் போது அங்கு சில வேலைகளுக்காக வந்திருந்த தன்னை போலீசார் தாக்கியதாகவும், அங்கு பெண் போலீசார் யாரும் இல்லை என்றும் அசாம் மாநில பார் கவுன்சில் உறுப்பினர் குஷ்பு வர்மா தெரிவித்துள்ளார்.