உலக செய்திகள்

‘புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம்’ - தாய்லாந்துவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேச்சு + "||" + "We are building a new India ' - Modi Speech

‘புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம்’ - தாய்லாந்துவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேச்சு

‘புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம்’ - தாய்லாந்துவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேச்சு
தாய்லாந்துவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை கட்டமைத்து வருவதாக தெரிவித்தார்.
பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதைப்போல கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.


இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று பாங்காக் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்தியர்களும் கலந்து கொண்டு பிரதமரை அன்போடு வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு பின்னால் இருந்த மிகப்பெரும் காரணத்தை (காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து) இந்தியா அழித்து விட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு முடிவு சரியாக இருந்தால், அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். அந்தவகையில் தாய்லாந்திலும் அதை நான் கேட்கிறேன்.

முடியாதது என்று கருதப்படுபவற்றை செய்து முடிக்கும் வகையில் எனது அரசு உழைத்து வருகிறது. சிறப்பாக பணியாற்றுவோர் மீது மக்கள் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

கர்தார்பூர் வழித்தடம் வருகிற 9-ந்தேதி திறக்கப்படுகிறது. இதன் மூலம் கர்தார்பூர் குருத்வாராவுக்கு பக்தர்கள் தடையின்றி சென்று வரமுடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் எங்கள் அரசு ஏற்படுத்திய மாற்றங்களால்தான், மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர்.

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதையே இலக்காக கொண்டு அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அந்தவகையில் புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக தாய்லாந்தின் பிரபல பத்திரிகையான பாங்காக் போஸ்ட் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரிவான மற்றும் சமமான பலன்கள் விளைய வேண்டும் என இந்தியா தொடர்ந்து விரும்புகிறது. இதன் வெற்றிகரமான முடிவு ஒவ்வொரு உறுப்பினரின் நலன் சார்ந்தது ஆகும். எனவேதான் சரக்கு, சேவைகள் மற்றும் முதலீட்டில் சமமான விளைவுகளை இந்தியா எதிர்பார்க்கிறது.

இந்த ஒப்பந்தத்துக்காக நாங்கள் நியாயமான பரிந்துரைகளை மிகவும் தெளிவான முறையில் முன்வைத்துள்ளோம். அத்துடன் இது தொடர்பாக மிகவும் நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கு ஈடான சேவை லட்சியங்களை, குறிப்பாக சக உறுப்பு நாடுகளின் சிக்கல்களை தீர்க்க நாங்கள் தயாராக இருப்பது போல எங்கள் கூட்டாளிகளிடம் இருந்தும் அவற்றை பார்க்க விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 2012-ம் ஆண்டு கம்போடியாவின் நாம்பென்னில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டின்போது தொடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாங்காக்கில் நாளை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால் ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தகத்துக்கு வாய்ப்பு ஏற்படும். உலக மக்கள் தொகையில் சுமார் சரிபாதி பேர் இந்த நாடுகளில் வசித்து வருவதால், உலகிலேயே மிகப்பெரிய தடையில்லா வர்த்தக பிராந்தியமாக இது அமையும் என கூறப்படுகிறது.

தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூல் வெளியீடு

இந்த நிகழ்ச்சியின்போது தாய்லாந்து (தாய்) மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரையை பிரதமர் மோடி தமிழில் ‘வணக்கம்’ கூறி தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள் ‘வந்தே மாதரம்’ எனவும், ‘பாரத் மாதா கீ ஜே’ எனவும் தொடர்ந்து முழங்கி மோடியை உற்சாகப் படுத்தினர்.