உலக செய்திகள்

ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு: தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு + "||" + ASEAN-India Summit: Our aim is to strengthen relations with Southeast Asian countries - PM Modi Speech

ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு: தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு

ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு: தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் என தாய்லாந்தில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று தொடக்க உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கும், ஆசியான் அமைப்புக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தினார்.


ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியாவின் கிழக்கு சார்ந்த கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக ஆசியான் அமைப்பு தொடர்ந்து இருக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

கடல்வழி பாதுகாப்பு, நீல பொருளாதாரம், அறிவியல் ஆய்வு, விவசாயம், பொறியியல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இருந்தது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா-ஆசியான் இடையிலான ஒத்துழைப்பு பார்வைகளின் ஒருங்கிணைப்பு வரவேற்கப்பட வேண்டும்.

ஒரு ஒருங்கிணைந்த, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முற்போக்கான ஆசியான் அமைப்பையே இந்தியா எப்போதும் விரும்புகிறது. நமது உறுப்பு நாடுகளுக்கு இடையே தரைவழி, வான்வழி, கடல்வழி மற்றும் டிஜிட்டல் இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக பாங்காக்கில் உள்ள ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலீடு செய்வதற்கு உலக அளவில் மிகவும் அதிக வாய்ப்புள்ள பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தற்போது விளங்குகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறப்பான தருணம். நாடு தற்போது உருமாறிக்கொண்டு இருக்கிறது. வழக்கமான அதிகாரத்துவ முறைகள் ஒழிக்கப்பட்டு விட்டன.

முதலீடு மற்றும் எளிதான வர்த்தகத்துக்கு இந்தியாவுக்கு வாருங்கள். புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு இந்தியாவுக்கு வாருங்கள். சிறப்பான சுற்றுலாத்துறை மற்றும் சிறந்த விருந்தோம்பலுக்கு இந்தியாவுக்கு வாருங்கள். உங்களுக்காக இந்தியா இருகரம் விரித்து காத்திருக்கிறது.

இந்தியா தற்போது 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2014-ம் அண்டு எனது அரசு ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 டிரில்லியன் டாலர்கள். முந்தைய 65 ஆண்டுகளில் 2 டிரில்லியன் வளர்ச்சியை எட்டிய இந்தியா, வெறும் 5 ஆண்டுகளில் சுமார் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 286 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. இது முந்தைய 20 ஆண்டுகளில் பெற்ற முதலீட்டில் ஏறக்குறைய பாதியளவு ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆசியான் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, வளத்துக்கு இணைந்து உழைப்பது என இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.

இந்தோனேஷியாவில் மீண்டும் ஆட்சியை பிடித்ததற்காக ஜோகோ விடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தார். இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகளை ஏற்படுத்தியதன் 70-வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினார். அப்போது ஆசியான் மாநாட்டு நிகழ்வுகளுக்காக தாய்லாந்துக்கு வருகை தந்தமைக்காக பிரதமர் மோடிக்கு, ஓச்சா நன்றி தெரிவித்தார்.