மாநில செய்திகள்

ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை + "||" + Paying Rs 5 Lakhs for NEET Exam Training: What happens to poor student's doctor's dream? High court judges torment

ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
ரூ.5 லட்சம் கொடுத்து பயிற்சி பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை என்னவாகும்? அவர்களது டாக்டர் கனவு கலைந்துவிடும் நிலை ஏற்படாதா?’ என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.
சென்னை, 

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.நாகராஜன், “ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள 6 ஆயிரத்து 976 மாணவர்களின் கை பெருவிரல் ரேகைகள் மற்றும் 7 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயிலும் 1,250 மாணவர்களின் பெருவிரல் ரேகைகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது” என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், “மாணவர்களின் பெருவிரல் ரேகைகளை கொண்டு எப்படி சரிபார்ப்பது? முறைகேட்டில் ஈடுபட்டவர்களை எவ்வாறு அடையாள காணுவது? என்பது தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையின்போது ஐகோர்ட்டுக்கு தெரியப்படுத்தப்படும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வில் தனியார் பயிற்சி மையங்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். தற்போது தமிழக மருத்துவ கல்வி தேர்வு குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘தமிழகத்தில் தனியார் பயிற்சி மையத்துக்கு செல்லாமல் தானாக படித்த 48 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள 3 ஆயிரத்து 33 மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்.

இதுபோல சுயநிதி கல்லூரிகளைப் பொறுத்தமட்டில் 52 பேர் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 1,598 பேர் பயிற்சி மையங்களுக்கு சென்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளைப்பொறுத்தமட்டில் 1,628 பேர் மட்டுமே முதல்முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். எஞ்சிய 3,103 பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதி அதன்பிறகு நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இதன்மூலம் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சில ஆண்டுகளை தியாகம் செய்து வருகின்றனர். தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.

இதன்மூலம் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு என்பது கலைந்து லட்சம், லட்சமாக பணம் செலவழித்து நீட் பயிற்சி மையங்களை நாடுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் என்ற பாகுபாடு உருவாகியுள்ளது.

எனவே, நீட் தேர்வுக்கான விதிகளை உருவாக்கிய மத்திய அரசு இந்த உண்மை நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும். தேவையான சட்டத்திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

அதேபோல நீட் தேர்வில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் அல்லது முறைகேடு செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனரா? என்பது குறித்தும், இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணமாக வசூலிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், ‘ரூ.5 லட்சம் கொடுத்து பயிற்சி பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து, மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை என்னவாகும்? அவர்களது டாக்டர் கனவு கலைந்து விடும் நிலை ஏற்படாதா?’ என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘மனித உயிரை காப்பாற்றும் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய ஊதியம் கொடுப்பது இல்லை. ரூ.57 ஆயிரம் தான் கொடுக்கின்றனர். இது ஆசிரியர் ஊதியத்தைவிட மிகவும் குறைவாக உள்ளது’ என்றும் கருத்து தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை நடக்கிறது; கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கொரோனாவையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
2. ‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை: கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிராம மக்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.