தேசிய செய்திகள்

சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் - மத்திய அரசு நடவடிக்கை + "||" + Gandhi family (Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi Vadra) will be given Z+ secuirty cover by Central Reserve Police Force all over India

சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் - மத்திய அரசு நடவடிக்கை

சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் - மத்திய அரசு நடவடிக்கை
சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு (எஸ்.பி.ஜி.) வாபஸ் பெறப்பட்டது.
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரதம மந்திரிகளுக்கு தனியாக ஒரு பாதுகாப்பு படை அமைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு உணர்ந்தது. இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) என்ற சிறப்பு கமாண்டோ படையை உருவாக்க 1988-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


அதன்படி நாட்டின் பிரதமர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாவலர்களுடன், அதிநவீன கார்கள், ஜாமர் கருவிகள், ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய கார்கள் வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், எஸ்.பி.ஜி. சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு பிரதமர், முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்படி ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, அவரது பிள்ளைகள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் 1991-ம் ஆண்டில் இருந்து எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டது.

28 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கிவந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. பாதுகாப்பு குறித்து மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனாலும் சோனியா காந்தி மற்றும் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இசட்-பிளஸ் பிரிவில் அவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். இந்த குழுவில் உள்ள துணை ராணுவத்தை சேர்ந்த கமாண்டோ படையினர் அவர்களது வீட்டில் பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்கள் இந்தியாவுக்குள் எங்கு சென்றாலும் உடன் சென்று நெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்குவார்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல் கூறும்போது, “தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே பா.ஜனதா இந்த அளவுக்கு கீழே இறங்கி உள்ளது. வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு தங்கள் உயிரை இழந்த 2 பிரதமர்களின் (இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி) குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை மத்திய அரசு சமரசம் செய்துகொண்டுள்ளது” என்றார்.