கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி + "||" + Last T20 cricket: India won by 30 runs

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய பவுலர் தீபக் சாஹர் ‘ஹாட்ரிக்’ சாதனை உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார்.
நாக்பூர்,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா நீக்கப்பட்டு மனிஷ் பாண்டேவும், வங்காளதேச அணியில் மொசாடெக் ஹூசைனுக்கு பதிலாக முகமது மிதுனும் சேர்க்கப்பட்டனர்.


‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்தியாவின் பேட்டிங்கை கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடங்கினர். ஆனால் இந்த முறை திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. ரோகித் சர்மா (2 ரன்) ஷபியுல் இஸ்லாமின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பையும் தாக்கியது. 2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் இறங்கினார். மறுமுனையில் தவானும் (19 ரன், 4 பவுண்டரி) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் ரன் கணக்கை ஆரம்பிக்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. ஷபியுல் இஸ்லாம் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை அடித்த போது ‘பேக்வர்டு பாயிண்ட்’ திசையில் நின்ற அமினுல் இஸ்லாம் கேட்ச் வாய்ப்பை தவற விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை ஸ்ரேயாஸ் அய்யர் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

அவரும், லோகேஷ் ராகுலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். ஸ்கோர் 94 ரன்களாக உயர்ந்த போது ராகுல் 52 ரன்களில் (35 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

சரவெடியாய் வெடித்த ஸ்ரேயாய் அய்யர், சுழற்பந்து வீச்சாளர் அபிப் ஹூசைனின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் தூக்கியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் அந்த ஓவரிலேயே 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முதலாவது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். அணி சவாலான ஸ்கோரை நோக்கி பயணிப்பதற்கு வித்திட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதற்கிடையே விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (6 ரன்) கிளன் போல்டு ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இறுதி கட்டத்தில் மனிஷ் பாண்டே (13 பந்தில் 3 பவுண்டரியுடன் 22 ரன்) அணி 170 ரன்களை கடப்பதற்கு உதவினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.

பின்னர் 175 ரன்கள் இலக்கை நோக்கி வங்காளதேச அணி ஆடியது. லிட்டான் தாஸ் (9 ரன்), சவுமியா சர்கார் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சாய்த்தார். இதனால் தடுமாற்றத்திற்குள்ளான வங்காளதேச அணியை முகமது நைமும், முகமது மிதுனும் கைகோர்த்து மீட்டெடுத்தனர். முகமது நைம் அதிரடியில் வெளுத்து கட்டினார். சாஹலின் பந்து வீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரி தெறிக்கவிட்ட அவர், வாஷிங்டன் சுந்தரின் சுழலிலும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். இதனால் அவர்களது ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. இருவரும் நிலைத்து நின்று ஆடிய விதத்தை கண்டு ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதற்றத்திற்குள்ளானார்.

இந்த சூழலில் மறுபடியும் தீபக் சாஹரை பந்து வீச அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிட்டியது. ஸ்கோர் 110 ரன்களை (13 ஓவர்) எட்டிய போது முகமது மிதுன் (27 ரன்) தீபக் சாஹரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த அபாயகரமான வீரர் முஷ்பிகுர் ரஹிமை (0) ஷிவம் துபே கிளன் போல்டு செய்ய, ஆட்டம் மறுபடியும் இந்தியா பக்கம் திரும்பியது.

அச்சுறுத்திக்கொண்டிருந்த முகமது நைமையும் (81 ரன், 48 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) துபே வீழ்த்த, வங்காளதேச அணியின் நம்பிக்கை தகர்ந்தது. கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டை அறுவடை செய்து வங்காளதேசத்தை முற்றிலும் சீர்குலைத்தார். 19.2 ஓவர்களில் அந்த அணி 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சாஹர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். தீபக் சாஹர் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி இந்தூரில் தொடங்குகிறது.     7 ரன்னுக்கு 6 விக்கெட்: தீபக் சாஹர் உலக சாதனை

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் 18-வது ஓவரின் கடைசி பந்தில் ஷபியுல் இஸ்லாமின் (4 ரன்) விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் முஸ்தாபிஜூர் ரகுமான், அமினுல் இஸ்லாம் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக கைப்பற்றி, ‘ஹாட்ரிக்’ சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் 27 வயதான தீபக் சாஹர் தான். இந்த ஆட்டத்தில் அவர் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமிக்க வைத்தார். இது ஒரு உலக சாதனையாகும். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு இலங்கையின் அஜந்தா மென்டிஸ் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.