தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு + "||" + Bulbul storm hit West Bengal; 10 killed - Prime Minister Modi talks with Mamata on phone

மேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

மேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் கடலோர பகுதிகளில் புல் புல் புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. புயல், மழையில் 10 பேர் பலியாகினர். முதல்-மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கொல்கத்தா,

வங்கக்கடலில் அந்தமானுக்கு வடமேற்கில் உருவான ‘புல்புல்’ புயல் மேற்கு வங்காள மாநிலத்தை அச்சுறுத்தி வந்தது. 2 நாட்களாக அங்கு பலத்த மழை பெய்து வந்தது.

இந்த புயல், கொல்கத்தாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள சாகர் தீவில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடந்தது. அந்தப் புயல் வங்காளதேசத்துக்கு சென்றது.


இந்தப் புயல் மேற்கு வங்காள மாநிலத்தில் ருத்ரதாண்டவமாடி விட்டது. பக்காளி, நம்கானா, காக்துவிப், சாகர்த்விப் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் மட்டும் 2 நாட்களில் ‘புல் புல்’ புயல் 104 மி.மீ. மழையைத் தந்தது. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. திகா, ஹவுரா, ஹூக்ளி, 24 பர்கானா, மெடினிபூர் பகுதிகளில் காற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக வீசியது.

நம்கானாவில் 2 படகுத்துறைகள் நாசமாயின.

நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் தடைப்பட்டது. தொலைதொடர்பு சேவை முடங்கியது. பயிர்கள் சேதம் அடைந்தன.

2,500 வீடுகள் இடிந்து விழுந்தன. 26 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.

கொல்கத்தா கிரிக்கெட் மற்றும் கால்பந்து கிளப்பில் பணியாற்றி வந்த 28 வயதான வாலிபர் மீது மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நம்கானாவில் மற்றொருவர் பலியானார். 


  வடக்கு பர்கானாவில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புர்பா மகாலா கிராமத்தில் சுசித்ரா மண்டல் என்ற மூதாட்டி மரம் விழுந்து பலியானார். கோக்னா கிராமத்தில் ரேபா பிஸ்வாஸ் (வயது 47) என்பவர் மரம் விழுந்து உயிரிழந்தார். இதே போல் மனிருல் காஜி (59) என்பவர் கீழே விழுந்து கிடந்த மின்கம்பத்தை மிதித்து மின்சாரம் பாய்ந்து பலியானார். மேலும் 2 பேர் மரம் விழுந்தும், சுவர் இடிந்துவிழுந்தும் உயிரிழந்தனர்” என்று குறிப்பிட்டார்.

கிழக்கு மிட்னாப்பூரில் மரம் விழுந்து ஒருவரும், தெற்கு பர்கானாவில் புயல் தொடர்பான சம்பவங்களில் 2 பேரும் பலியாகினர். 8 மீனவர்கள் காணாமல் போய் விட்டனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கடலோரப்பகுதிகளில் வசித்து வந்த 1 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

2¾ லட்சம் குடும்பங்கள் புல்புல் புயலால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் இரவு விடிய விடிய தலைமைச்செயலகத்தில் தங்கி இருந்து, மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். அங்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து புயல் நிலவரம் கண்காணிக்கப்பட்டது.

மம்தா பானர்ஜியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், மம்தாவிடம் புயலால் பாதித்துள்ள மேற்கு வங்காள மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.

இதை மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், புயல் பாதித்த பகுதிகளில் வாழ்கிறவர்கள் பாதுகாப்புக் காகவும், நலனுக்காகவும் தான் பிரார்த்திப்பதாகவும் அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று மம்தா பானர்ஜியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் தொலைபேசியில் பேசினார். ‘புல் புல்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளில் மத்திய அரசு உதவி செய்யும் என உறுதி அளித்தார்.

மேற்கு வங்காளத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்களும், ஒடிசாவுக்கு 6 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். மேலும் 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒடிசாவிலும் ‘புல் புல்’ புயலுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

‘புல்புல்’ புயல் வங்காள தேசத்தையும் தாக்கியது. அங்கு இந்த புயலுக்கு 2 பேர் பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற 150 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் பேருந்துகள் முழு அளவில் இயக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை நேற்று முதல் முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்த மாநில மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
2. மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
3. மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
4. மேற்கு வங்காளத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரம்
மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
5. மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.