மாநில செய்திகள்

சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி + "||" + Air pollution in Chennai is gradually decreasing, Minister RB Udayakumar said

சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
‘சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது’ என்றும், ‘மக்கள் பீதி அடைய தேவையில்லை’ என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு பிரச்சினை சென்னையிலும் வந்துவிட்டது என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதை நம்பும் வகையில் கடந்த சில நாட்களாவே அதிகாலை முதலே சென்னையில் பல இடங்களில் தூசு படர்ந்து இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


இந்தநிலையில் காற்று மாசு தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. வருவாய்-பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் என்.வெங்கடாசலம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், கூடுதல் தலைமை பொறியாளர் செல்வம், துணை இயக்குனர் தியாகராஜன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குனர் டாக்டர் வடிவேலன், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சிவ நாகேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பனியா? மாசு பிரச்சினையா?

ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாகவே சென்னையில் காற்று மாசு குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டோம்.

கடந்த ஒருவார காலமாகவே சென்னையில் அதிகாலையில் மேகமூட்டம் சூழ்ந்தது போன்று காணப்பட்டது. இது பனி மூட்டமா? அல்லது காற்று மாசுபாடா? என்பது குறித்து பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

கடல் காற்று இல்லாததால்...

வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிறபோது, மேகங்கள் தாழ்வான சூழ்நிலைக்கு வரும். அப்போது சூரிய ஒளிக்கதிர்கள் முழுமையாக மேகங்களைத் தாண்டி உள்ளே வராது. அது போன்ற சமயங்களில் கடல் காற்று வீசி மேகங்களை கலைத்து, அதனால் மழை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இந்த முறை கடல் காற்றின் ஈரப்பதம் குறைந்து உள்ளதால் தாழ்வாக சூழ்ந்திருக்கும் மேகங்கள் நகரவில்லை. எனவே வாகனங்களின் புகை மற்றும் காற்றின் துகள்கள் ஒன்று சேர்ந்து அந்த மேகங்களில் படிந்து மாசு போலவும் அல்லது பனிமூட்டம் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களாக கடல் காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது.

28 இடங்களில் ஆய்வு

மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 28 இடங்களில் தர ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டு காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் 8 நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு நிலையங்களின் தர அளவு 0 முதல் 50 வரை இருந்தால் ‘நன்று’, 51 முதல் 100 வரை இருந்தால் ‘போதுமானது’, 101 முதல் 200 வரை இருந்தால் ‘மிதமானது’, 201 முதல் 300 வரை இருந்தால் ‘மோசமானது’, 301 முதல் 400 வரை இருந்தால் ‘மிக மோசமானது’, 400 முதல் 500 வரை இருந்தால் ‘தீவிரம்’, 500-க்கும் மேலிருந்தால் மிக தீவிர காலநிலை என்று குறிப்பிடப்படுகிறது.

தற்போது சில இடங்களில் மட்டுமே இந்த தர அளவுகள் 201 முதல் 300 வரை அதாவது ‘மோசமானது’ என்று தெரியவந்துள்ளது. பல இடங்களில் காற்று மாசு பிரச்சினை இல்லை. அந்தவகையில் சென்னையில் ஒட்டுமொத்தமாக காற்றின் மாசு அளவு அதிகரிக்கவில்லை. காற்று மாசு பிரச்சினையால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட எந்த வகையான நோய் தாக்கமும் ஏற்படவில்லை.

கதைகளை நம்ப வேண்டாம்

கடந்த ஒரு வார காலமாக சென்னையில் ஓரளவு இந்த மாசுப் பிரச்சினை தென்பட்டது. இப்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே காற்று மாசு குறித்து எந்த பீதியும், கலக்கமும், பயமும் மக்கள் கொள்ளத் தேவையில்லை.

‘சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது’, ‘டெல்லியில் இருந்து கடல் வழியாக மாசு பிரச்சினை சென்னையில் அடியெடுத்து வைத்துவிட்டது’ என்பது போன்ற கதைகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் நீர் இருக்கிறது. இது மகிழ்ச்சியான தகவல்.

புயல் பாதிப்பு இல்லை

வடகிழக்கு பருவமழையை நாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தயாராகவே இருக்கிறோம். தற்போது வரை தமிழகத்துக்கு எந்த புயல் பாதிப்புக்களும் இல்லை.

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே சென்னையில் காற்று மாசு இல்லை. ஒரு சில இடங்களில் இப்பிரச்சினை தென்பட்டு இருக்கிறது. காற்றின் வேகம், வெப்பம், ஈரப்பதம், வாகனப் போக்குவரத்து, சாலையில் உள்ள தூசி, கட்டுமானப்பணி, திடக்கழிவுகளை எரிப்பது, கடல் காற்றின் தன்மை போன்ற காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அதன் அடிப்படையில் காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் மாசு பிரச்சினையை குறைக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

நடவடிக்கைகள்

* சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் மரம், டயர் மற்றும் குப்பைகள் எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி எரிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சாலைப் பணிகள், கட்டிடப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் தூசுகளை குறைக்க அதன் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் தெளித்து தூசியின் அளவை முற்றிலும் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* வாகனப் புகை மூலம் ஏற்படும் மாசை தடுப்பதற்கு போக்குவரத்து துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பீதி அடைய தேவையில்லை

சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு கடற்காற்று எதிர்பார்த்த அளவுக்கு வீசாதது, ஒரு முக்கிய காரணமாகும். இந்த காற்று மாசு படிப்படியாக குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் சென்னையில் காற்று மாசு கண்காணிக்கப்பட்டு அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் காற்று மாசு ஏற்படுத்தும் எந்த வித செயல்களிலும் ஈடுபட வேண்டாம். அதேவேளை காற்று மாசு தொடர்பான பீதியும் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
2. வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
3. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
4. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
5. கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.