கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு + "||" + Disqualified Karnataka MLAs’ case: All eyes on Supreme Court as it delivers verdict today
கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கர்நாடகத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி,
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.
14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளார். இதில் 3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
சபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 17 பேரும் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் சுமார் ஒரு வாரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், ஜனதா தளம்(எஸ்) சார்பில் வக்கீல் ராஜீவ்தவான் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.
கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்து எடியூரப்பா பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோவை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை கவனத்தில் கொள்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்ப்பு தாமதமானால், தாங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்தனர். அதனால் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், புதிய மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதன்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் வருகிற வருகிற 13-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி 17 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. சபாநாயகரின் உத்தரவு செல்லுமா? என்பதும், இடைத்தேர்தல் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? அல்லது இடைத்தேர்தல் நடைபெற்றால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட முடியுமா? என்பது தெரியவரும்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்தை, சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் நேற்று ஜாமீனில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து, 106 நாட்களுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.