தேசிய செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Supreme Court directs Pon.Manickavel to hand over idolatrous documents to ADGP

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி,

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை உயரதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது.


கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பணி நீட்டிப்பு கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை உயரதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக்பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, ஜெயந்த்பூஷண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் பா.வினோத்கன்னா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தரப்பில் வக்கீல் சாய்தீபக், ஐகோர்ட்டில் மனுதாரராக இருந்த யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி, வக்கீல்கள் முத்துக்குமார், ஆனந்த் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கு விசாரணையின்போது பொன் மாணிக்கவேல், கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு ராஜேஸ்வரி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அரசிடமோ மேலதிகாரிகளிடமோ ஒப்படைக்கவில்லை. இது மிகப்பெரும் விதிமீறல். சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் 70 அதிகாரிகளில் 51 அதிகாரிகள் அவருக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அவருடைய பதவி நீட்டிப்பு கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. முக்கியமான ஆவணங்களை அவர் தன்னிடம் வைத்துக் கொள்ள முடியாது, மூத்த அதிகாரியிடம் ஒப்படைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவர் அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்கிறார். அவர் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டார். எனவே அவர் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம். இவ்வாறு வாதாடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், காணாமல்போன சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது. சென்னை ஐகோர்ட்டுக்கு இருந்தது. அதனால்தான் பொன் மாணிக்கவேலை நியமித்து அவரது செயல்பாடுகளை அவர்களே கண்காணித்தனர். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு தொல்லைகள் கொடுத்ததால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என விளக்கம் அளித்தனர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, பணி எப்போது நீட்டிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும்போது ஒரு அதிகாரியின் அவசியம் கட்டாயம் தேவை என அரசு கருதும்போது பணி நீட்டிக்கலாம் என கூறியிருக்கிறது. இந்த விவகாரம் அப்படி இல்லை. எனவே பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு அவசியம் இல்லை என தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் பொன் மாணிக்கவேல் அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொன் மாணிக்கவேலுக்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டே முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

பணி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதில் அளிக்குமாறு பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொன் மாணிக்கவேல் தரப்பில், ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்காமல் ஐகோர்ட்டில் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகம் முழுவதும் 10-ந் தேதியில் இருந்து தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது? அரசு முடிவு செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு
மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது தொல்லியல் துறை தகவல்
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வருகிற 31-ந்தேதி வரை திறக்கப்பட மாட்டாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
5. பக்ரீத் பண்டிகைக்கு பொது இடங்களில் விலங்குகளை பலியிட கூடாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.