உலக செய்திகள்

நிலவில் விக்ரம் லேண்டர் மோதிய பகுதி கண்டுபிடிப்பு; நாசா அறிவிப்பு + "||" + Nasa finds Vikram Lander, releases images of impact site on moon surface

நிலவில் விக்ரம் லேண்டர் மோதிய பகுதி கண்டுபிடிப்பு; நாசா அறிவிப்பு

நிலவில் விக்ரம் லேண்டர் மோதிய பகுதி கண்டுபிடிப்பு; நாசா அறிவிப்பு
நிலவில் தரையிறங்க முற்பட்ட விக்ரம் லேண்டர் மோதிய பகுதியை நாசா கண்டறிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளது.
வாஷிங்டன்,

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7ந்தேதி அதிகாலை நிலவில் தரையிறங்க முயன்றது.

கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம்,  மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்த இஸ்ரோ, ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்தது.  இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

இந்நிலையில் நாசா 2009 ஆம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து சென்றது. அந்த நேரத்தில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்படும் எனவும் நாசா தெரிவித்தது.  எனினும், விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்தது. மேலும் சமிக்ஞை மூலமாகவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா கூறியது.

இந்த நிலையில், நாசாவின் ஆர்பிட்டர் கேமிரா, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்தற்கு முன்பும், நிலவில் மோதிய பின்பும் தரை பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்துள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட புகைப்படத்தில் நீலம் மற்றும் பச்சை நிற புள்ளி குறியீடுகளால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.  இவற்றில் பச்சை புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உடைந்த பகுதிகளை (உறுதி செய்யப்பட்டது அல்லது இருக்கலாம்) அடையாளம் காட்டுகிறது.

விக்ரம் லேண்டர் மோதியதில் தென்துருவ நிலவின் தரையில் மண்பகுதி விலகி இருப்பது நீல நிற புள்ளிகளால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளது.  சண்முக சுப்ரமணியன் என்பவரால் விக்ரம் லேண்டரின் உடைந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டன என குறிக்கும் வகையில் எஸ் என்ற எழுத்து காட்டப்பட்டு உள்ளது.