ஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக சர்ச்சை - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ் + "||" + Controversy over Rs 170 crore bid for Hyderabad - Income Tax Notice to Congress
ஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக சர்ச்சை - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ்
ஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி,
உள்கட்டமைப்பு துறையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை, ஐதராபாத், ஈரோடு, புனே, ஆக்ரா, கோவா ஆகிய நகரங்களில் 42 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில், பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை போலி ரசீதுகள் மூலமும், போலி ஒப்பந்தங்கள் மூலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்தது தெரிய வந்தது. இந்த திட்டங்கள், தென்னிந்தியாவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான திட்டங்களும் ஆகும்.
ரூ.3 ஆயிரத்து 300 கோடி நிதி அபகரிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹவாலா பரிமாற்றமும் நடந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடியே 19 லட்சமும், ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த சோதனையின்போது, ஐதராபாத்தை சேர்ந்த மெகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் என்ஜினீயரிங் என்ற நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.170 கோடி கொடுத்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.
ஆந்திராவை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு ரூ.150 கோடிக்கு மேல் ரொக்கமாக கொடுக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆந்திர அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர், வருமான வரித்துறையின் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.
இந்நிலையில், ஐதராபாத் நிறுவனத்திடம் இருந்து ரூ.170 கோடி பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
பணம் பெற்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான ரூ.3 ஆயிரத்து 300 கோடி ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பான வழக்கின் ஒரு அங்கமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.