தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது ; சசிதரூர் விமர்சனம் + "||" + Citizenship Bill Is "Fundamentally Unconstitutional," Says Shashi Tharoor

குடியுரிமை மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது ; சசிதரூர் விமர்சனம்

குடியுரிமை மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது ; சசிதரூர் விமர்சனம்
குடியுரிமை மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு  வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். மசோதா தாக்கல் செய்யப்படும் போது பாஜக எம்.பிக்கள் அனைவரும்  அவையில் இருக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறுகையில், "இந்த  மசோதா அடிப்படையிலேயே சட்ட விரோதமானது என்று நான் கருதுகிறேன். ஏனெனில், இந்தியாவின் அடிப்படை சிந்தனையையே இந்த மசோதா மீறுகிறது.

மதத்தை நம்பியிருப்பவர்களின் தேசியத்தைத் தீர்மானிக்கும் சிந்தனை என்பது பாகிஸ்தானுக்கு உரித்தானது. அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் உருவானது. ஆனால், எங்கள் சிந்தனைகள் என்பது மகாத்மா காந்தி, நேரு, மவுலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வாதிட்டு இருக்கிறோம். மதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது. நமது நாடு அனைவருக்குமானது. மதங்களை பொருட்படுத்தாமல் அனைவருக்குமான தேசம் நம்முடையது” என்றார்.