தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி மந்திரிகள் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு - ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க கோரிக்கை + "||" + Opposition parties meet with ruling state finance ministers Nirmala Sitharaman - GST Request to pay compensation

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி மந்திரிகள் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு - ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க கோரிக்கை

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி மந்திரிகள் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு - ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க கோரிக்கை
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் பல்வேறு நேர்முக, மறைமுக வரிகளை ஒன்றிணைத்து மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இந்த வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சமாளிக்க மத்திய அரசு இழப்பீடு தொகை வழங்குகிறது.


2 மாதங்களுக்கு ஒருமுறை இந்த தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த தொகை வழங்கப்படவில்லை. இதனால் மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி இருந்தன.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினர். அதன்படி டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிதி மந்திரிகளும், கேரளா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களது கோரிக்கையை கேட்டுக்கொண்ட நிர்மலா சீதாராமன், இழப்பீட்டு தொகையை கூடிய விரைவில் தருவதாக உறுதியளித்தார். எனினும் அதற்கான கால வரையறை எதையும் அவர் குறிப்பிடவில்லை.

இந்த சந்திப்புக்கு பின் மாநில நிதி மந்திரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பஞ்சாப் நிதி மந்திரி மன்பிரீத் சிங் பாதல் கூறுகையில், ‘ஆகஸ்டு-செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கவில்லை. அடுத்த (நவம்பர்-டிசம்பர்) 2 மாதங்களுக்கான தொகையை வழங்க வேண்டிய காலமும் வந்து விட்டது. எனவே இந்த நிலுவைத்தொகையை விரைவில் வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

இதைப்போல தங்களுக்கான உரிமையை (ஜி.எஸ்.டி. இழப்பீடு) கேட்க வந்ததாக கூறி மத்திய பிரதேச நிதி மந்திரி பிரஜேந்திர சிங், சட்டப்படி இந்த தொகை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்றும் தெரிவித்தார்.

இதே கருத்தை எதிரொலித்த ராஜஸ்தான் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி சுபாஷ் கார்க், இந்த தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் மாநிலம் மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘சில மாநிலங்களின் நிதி மந்திரிகள் என்னை சந்தித்து, ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

இதைப்போல, ‘ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை மீதான மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்கும்’ என நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குரும் கூறினார்.