கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + "||" + 3rd Match Over Cricket: India won by 67 runs - Seized the series

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
மும்பையில் நேற்றிரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மும்பை,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இந்திய அணியில் இரு மாற்றமாக ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர்.


டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். பேட்டிங்குக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். சர்வசாதாரணமாக பந்து எல்லைக்கோட்டுக்கு ஓடியது. இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இந்திய வீரர்கள் 72 ரன்களை திரட்டினர். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கதறடித்தனர். கேரி பியரின் ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய ரோகித் சர்மா அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் லோகேஷ் ராகுலும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தெறிக்க விட்டார்.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 135 ரன்களாக (11.4 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தது. ரோகித் சர்மா 71 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (0) டக்-அவுட் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் விராட் கோலியும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இந்தியாவின் ரன்வேகத்துக்கு அணை போட முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திண்டாடினர். ஜாசன் ஹோல்டரின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி ஓடியது. ருத்ரதாண்டவமாடிய கோலி, எதிரணி கேப்டன் பொல்லார்ட்டின் ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அத்துடன் 21 பந்துகளில் தனது 24-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

இன்னொரு பக்கம் லோகேஷ் ராகுலுக்கு சதம் அடிக்க கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்டது. தனது 3-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்த்த வேளையில் லோகேஷ் ராகுல் 91 ரன்களில் (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கோலி 70 ரன்களுடன் (29 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 


அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பிரன்டன் கிங் (5 ரன்), லென்டில் சிமோன்ஸ் (7 ரன்), நிகோலஸ் பூரன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை 17 ரன்னுக்குள் பறிகொடுத்து தவித்தது. இந்த வீழ்ச்சியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியால் முழுமையாக மீள முடியவில்லை. மிடில் வரிசையில் ஹெட்மயர் (5 சிக்சருடன் 41 ரன்), கேப்டன் பொல்லார்ட் (5 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்) கொஞ்ச நேரம் வாணவேடிக்கை காட்டியது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதலாகும்.

20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட்டுக்கு 173 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்டநாயகன் விருதை லோகேஷ் ராகுலும், தொடர்நாயகன் விருதை விராட் கோலியும் பெற்றனர்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 15-ந்தேதி சென்னையில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

 


 ரோகித் சர்மா 400 சிக்சர் அடித்து சாதனை

இந்த ஆட்டத்தில் 3-வது ஓவரின் முதல் பந்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா சிக்சர் அடித்த போது, அது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி மூன்றையும் சேர்த்து) அவரது 400-வது சிக்சராக பதிவானது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர்களை அதிவேகமாக எட்டிய வீரர், மொத்தத்தில் இந்த மைல்கல்லை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சர்வதேச போட்டியில் அதிக சிக்சர் விளாசியவர்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லும் (534 சிக்சர்), பாகிஸ்தானின் சாகித் அப்ரிடியும் (476 சிக்சர்) உள்ளனர்.

354 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா இதுவரை 404 சிக்சர்கள் (ஒரு நாள் போட்டி-232, டெஸ்ட்-52, இருபது ஓவர் போட்டி-120) அடித்திருக்கிறார்.

கோலியின் அதிவேக அரைசதம்

* இந்திய அணி குவித்த 240 ரன்களே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு இங்கு 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது, இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* இந்திய கேப்டன் விராட் கோலி 21 பந்துகளில் அரைசதத்தை ருசித்தார். இது அவரது அதிவேக அரைசதமாகும். மொத்தத்தில் இந்தியாவின் 5-வது அதிவேக அரைசதமாக இது பதிவானது.

* இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 71 ரன்களும், லோகேஷ் ராகுல் 91 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் விளாசினர். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 3 பேட்ஸ்மேன்கள் 70 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்நிகழ்வாகும்.
 


 வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவின் லீவிஸ் காயம்

மும்பையில் நேற்றிரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் பீல்டிங்கின் போது காயமடைந்தார். அவரது வலது கால் முட்டி மைதானத்தில் பலமாக இடித்ததால் வலியால் துடித்த அவர், ஸ்டிரச்சர் மூலம் வெளியே அழைத்து செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக எஞ்சிய நேரம் கீமோ பால் பீல்டிங் செய்தார். காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்யவும் வரவில்லை. இது வெஸ்ட் இண்டீசுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.