தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - அசாம் போர்க்களமாக மாறியது + "||" + Opposition to the Citizenship Amendment Bill - Assam became a battleground

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - அசாம் போர்க்களமாக மாறியது

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - அசாம் போர்க்களமாக மாறியது
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்துவருவதால் அசாம் போர்க்களமாக மாறியது. வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். கவுகாத்தியில் தலைமைச் செயலகம் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த தடுப்புகளை வீசி எறிந்தனர். பல மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே வந்திருந்தனர்.


முக்கிய சாலைக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாரையும் மீறி அவர்கள் தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றதால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். அப்போதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், சிறிது நேரத்தில் மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். போராட்டக்காரர்களும் போலீசாரை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினார்கள். இதனால் தலைமைச் செயலகம் முன்பு போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.

அந்த பகுதியில் உள்ள சாலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். தலைமைச் செயலகம் முன்பு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டு இருந்த பேனர்கள், விளம்பர பலகைகளையும் உடைத்து நொறுக்கினர்.

பா.ஜனதாவின் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான இந்த அரசு காட்டுமிராண்டித்தனமானது. குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெறும் வரை நாங்கள் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம் என்று மாணவர் சங்க தலைவர் கூறினார். போலீசார் நடத்திய தடியடியில் பல போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.

திப்ருகாரிலும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். இந்த சண்டையில் ஒரு பத்திரிகையாளரும் கல்வீச்சில் காயம் அடைந்தார். அங்கு சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு எரித்தனர். பல நகரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. லக்வாவில் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் சிலர் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ரெயில் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டன அல்லது வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன. பா.ஜனதாவின் எம்.பி., மாநில மந்திரி உள்ளிட்ட தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. சில மந்திரிகளுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. 


ஜோரட், கொலாகாட், திப்ருகார், தின்சுகியா, சிவசாகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது. முதல்-மந்திரியின் சொந்த ஊரான சாபுவாவில் கண்டன மோட்டார்சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன. பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடின. கவுகாத்தி, திப்ருகார், ஜோரட் ஆகிய பகுதிகள் போர்க்களம் போலவே காட்சியளித்தது.

இதற்கிடையே அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். காஷ்மீரில் பணியில் இருந்த 20 கம்பெனி (2 ஆயிரம் பேர்), மற்ற மாநிலங்களில் பணியில் இருந்த 30 கம்பெனி (3 ஆயிரம் பேர்) உடனடியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த படையில் மத்திய ஆயுதப்படை போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சாஷ்டிரா சீமா பால் ஆகிய படை பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினரும் உதவ வேண்டும் என்று மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவ கமாண்டர்களும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ஒரு அணியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்திலும் ஒரு அணி ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு அணியில் 70 வீரர்கள் இருப்பார்கள்.

பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன் இணையதள இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் 24 மணி நேரத்துக்கு இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு
குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு: ஆந்திராவில் தொடரும் போராட்டம்
3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் எதிர்க்கட்சிகள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
4. தேவர்சோலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி
தேவர்சோலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி சென்றனர்.
5. குடியுரிமையை நிரூபிக்க 1971-க்கு முந்தைய ஆவணங்கள் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்
இந்திய குடியுரிமையை நிரூபிக்க தங்கள் வம்சாவளியினரின் பூர்வீக ஆவணங்களை சமர்பிக்க வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.