நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்: 73 ராணுவ வீரர்கள் பலி


நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்: 73 ராணுவ வீரர்கள் பலி
x
தினத்தந்தி 12 Dec 2019 10:58 AM GMT (Updated: 12 Dec 2019 10:58 AM GMT)

நைஜர் நாட்டில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 73 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

நியாமே,

ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு நைஜர்.  கடந்த சில ஆண்டுகளாகவே மாலி, நைஜர், பர்கினோ பாசோ போன்ற ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதிகள் நடமாட்டமும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. 

நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, நைஜர் ராணுவம் அண்டை நாடான மாலி ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் நாடு ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவியாக தனது ராணுவ வீரர்களை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

மாலி நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள இனேட்ஸ் நகரில், நைஜர் ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். இந்த முகாமிற்குள் நேற்று மாலை புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

எதிர்பாராமல் நேர்ந்த இந்த தாக்குதலில் 73 நைஜர் ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இது குறித்து நைஜர் நாட்டின் ஜனாதிபதி கடாம்பே கூறுகையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பலர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்களை சந்தித்து பேச உள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்ததையடுத்து அந்த சந்திப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story