மாநில செய்திகள்

பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினை: தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை + "||" + Parampikkulam aliyaru Issue: Tamil Nadu-Kerala authorities Talks

பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினை: தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினை: தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினை தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை, 

தமிழகம்- கேரள மாநிலங்களுக்கு இடையேயான பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன் தலைமை தாங்கினார். கேரள அரசின் நீர்வள துறை செயலாளர் டாக்டர் பி.அஷோக் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இரு மாநிலங்களை சேர்ந்த குழு உறுப்பினர்கள் மற்றும் இரு மாநில நீர்வளதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் இரு மாநிலமும் நீர் பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பாண்டியாறு - புன்னம்புழா

பின்னர் டாக்டர் கே.மணிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் கேரள முதல்- மந்திரியை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. பரம்பிக்குளம்- ஆழியாறு திட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு குழு அமைக்கவும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கவும் அந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 2 மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பரம்பிக்குளம்- ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான நடைமுறை சிக்கல்களையும், இந்த ஒப்பந்தத்தை இரு மாநில மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக அமைப்பது என்பது தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப கருத்துகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் அடுத்த கூட்டம்

பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பாக இரு மாநிலம் சார்பாக பணிக்குழு அமைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கேரள மாநிலம் சார்பில் அதிகளவில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டனர். அடுத்த கூட்டம் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் நடத்தலாம் என்று அவர்கள் கூறி உள்ளனர். பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது அதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கவில்லை. இந்த கூட்டத்தில் பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினை பற்றி மட்டும் ஆலோசிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.