மாநில செய்திகள்

வேட்பு மனுத்தாக்கல் முடிய 4 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை பகிர்வதில் அ.தி.மு.க.-தி.மு.க. தீவிரம் + "||" + For coalition parties AIADMK - DMK in sharing of seats

வேட்பு மனுத்தாக்கல் முடிய 4 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை பகிர்வதில் அ.தி.மு.க.-தி.மு.க. தீவிரம்

வேட்பு மனுத்தாக்கல் முடிய 4 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை பகிர்வதில் அ.தி.மு.க.-தி.மு.க. தீவிரம்
உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிய 4 நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை பகிர்வதிலும், தங்கள் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் அ.தி.மு.க., தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை, 

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

பல வழக்குகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி குறியோடு தான் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் பெரிய அளவில் வேட்புமனு தாக்கல் நடக்கவில்லை. தேர்தல் நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த பிறகு வேட்புமனுத்தாக்கல் சூடுபிடித்துள்ளது.

சுயேச்சைகள் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் இன்னும் தீவிரம் காட்டவில்லை. உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற நிலை வந்த பிறகே, தற்போது அவர்கள் தங்கள் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

ஆளும்கட்சியான அ.தி.மு.க. தேர்தல் நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்கி விட்டது. ஏற்கனவே அக்கட்சி தங்கள் கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் வார்டுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.

வேட்புமனுத்தாக்கல் முடிய 4 நாட்களே உள்ளதால் தற்போது 2-ம் கட்டமாக, கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை (சனிக்கிழமை) கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு கண்டு, வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒட்டு மொத்தமாக அவர்கள் மனுத்தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தனது கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சி வார்டுகளை பகிர்வது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் ஏற்கனவே சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று 2-ம் கட்டமாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல் ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து பார்த்தால் 3 நாட்களே இருக்கிறது. எனவே கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை இறுதி செய்தல், வேட்பாளர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகளில் அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகிறது.

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...