மாநில செய்திகள்

"உள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது!" தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் + "||" + MK Stalin's letter to volunteers

"உள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது!" தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

"உள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது!"  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
உள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது என மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, மக்களின் செல்வாக்கு இல்லாமலேயே, தரை தவழ்ந்து, கால் தடவி, ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு ஏதாவது இட்டுக்கட்டிக் காரணம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, தி.மு.க. மீது பழியைச் சுமத்தினர்.

ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், தி.மு.க.  என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. வெற்றி - தோல்வியைக் கடந்து, தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் நம் கழகம். அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை தி.மு.க. ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

மாநிலத் தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிள்ளையாக வைத்துக்கொண்டு, அடிமை அ.தி.மு.க. அரசு நடத்துகிற ஜனநாயகப் படுகொலைகளை நீதிமன்றங்களே பல முறை தட்டிக் கேட்டிருக்கின்றன. அதனால்தான், 8-12-2019 அன்று நடைபெற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதனைத் தோலுரித்துக் காட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.கழகம் நீதிமன்றத்தை நாடியது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கம் அந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அ.தி.மு.க. அரசிடம் 'சரணாகதி' செய்து விட்டு - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக - உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணிவகுக்க வைத்து - மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருக்கிறது” எனக் கண்டனத்தைப் பதிவு செய்த அந்தத் தீர்மானத்தில், கழகம் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கான காரணங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை. கடந்தகால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும்.

சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்லது.

அதிகம் வாசிக்கப்பட்டவை