மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை + "||" + All over Tamil Nadu Wide rain

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பரவலாக மழை
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மதியம் லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் கன மழையாக மாறியது. 

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பல்லடம், அவினாசி, தாராபுரம், உடுமலை, காங்கேயம், உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.   பின்னர் மழை பெய்யத் தொடங்கியதால்  இருசக்கர வாகன ஓட்டிகள்  நனைந்தபடி சென்றனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று மதியம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிதமான  மழைபெய்தது. இதனால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வைகை அணை, ரெங்கசமுத்திரம், பிச்சம்பட்டி, சக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிறைந்தன. வராகநதி, கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மும்முரமாக நெல்சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...