தேசிய செய்திகள்

தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் -நாளை முதல் கட்டாயமாகிறது + "||" + FASTag compulsory from tomorrow

தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் -நாளை முதல் கட்டாயமாகிறது

தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் -நாளை முதல் கட்டாயமாகிறது
தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் தொழில்நுட்பம் நாளை முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
சென்னை,

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் பெரும்பாலான நகரங்களில் நான்கு வழிச்சாலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த  சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தால், அந்த வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற விதி உள்ளது.

இதனை பயன்படுத்தி பெரும்பாலான வாகனங்கள் கட்டண சலுகை பெற்று வந்தன. இதனால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.

மேலும், மத்திய அரசு கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அரசு துறைகளில் 100  சதவீதம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பண  பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்படுகிறது.

முன்னதாக டிசம்பர் 1-ம் தேதிக்குள், பாஸ்டேக் கட்டாயம் என்ற தனது முந்தைய உத்தரவை அரசு தளர்த்தி டிசம்பர் 15-ம் தேதிவரை கால அவகாசம்  கொடுத்திருந்தது. அதன்படி, நாளை (டிசம்பர் 15-ந் தேதி) முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வருகிறது. இதற்கு ’பாஸ்டேக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவோரிடம் சுங்கச்சாவடி ஊழியர்களால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சில நேரங்களில் அதிக கட்டணம் வசூலித்தல், நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தல் போன்றவை பயணிகளின் எரிச்சலுக்கான காரணங்களாக உள்ளன.

இதை சரி செய்வதற்காகவே ‘பாஸ்டேக்’ என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஸ்டிக்கராகும். இதற்குள் நுண்ணிய சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும்.  வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இதை ஒட்டிக்கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடு ஆர்.எப்.ஐ.டி. என்று சொல்லப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர், சுங்கச்சாவடிகளை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கருவியுடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்தும். அந்த வாகனத்தின் ரகம் என்ன? அதற்காக வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் எவ்வளவு? என்பதை உடனடியாக துல்லியமாக கணிக்கும்.

மேலும், வாகன ஓட்டியின் வங்கி கணக்கை இந்த கருவியுடன் இணைப்பதோடு, அங்கிருந்து சுங்கக் கட்டணமாக அந்த வாகனம் செலுத்த வேண்டிய  கட்டணத்தை மட்டும் தானாக எடுத்துக்கொள்ளும். எனவே ‘பாஸ்டேக்’  ஒட்டப்பட்ட வாகனங்களுக்கென்று தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியில் வாகனங்கள் நிற்காமல் போய்க்கொண்டே இருக்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையில் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் வந்துவிட்டால், 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.