தேசிய செய்திகள்

“நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார்” - மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு + "||" + He has ruined the country's economy - Rahul Gandhi's severe attack on Modi

“நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார்” - மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

“நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார்” - மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி,

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

அத்துடன் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து இருப்பதோடு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றுக்கும் மத்திய அரசின் தவறான அணுகு முறையே காரணம் என்று கூறி உள்ளது.


இந்த நிலையில், ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற பெயரில் நேற்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகம், ரெயில் நிலையம், பாராகம்பா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் பேரணியாக மைதானத்துக்கு வந்தனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமாக பேசினார். அப்போது பிரதமர் மோடியை அவர் கடுமையாக தாக்கினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவின் பலமே அதன் பொருளாதாரம்தான் என்பதால், நம் நாட்டின் எதிரிகள் அனைவரும் அதை அழிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இருந்தபோதிலும் அவர்களால் அதை செய்யமுடியவில்லை. ஆனால் பிரதமர் மோடி தனி ஆளாக இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். தொடர்ந்து அந்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தன்னை தேசபக்தர் என்று சொல்லிக்கொள்ளும் அவருக்கு, தனது பதவியை பற்றிய நினைப்பு மட்டுமே உள்ளது.

ஆட்சி அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியினர் நாட்டின் பொருளாதாரம் சீரழிவது பற்றியோ, இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பது பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் நாட்டின் நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய காங்கிரசார் தயாராக இருக்கிறார்கள்.

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி நான் கூறிய கருத்துக்காக, நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். நான் ராகுல் சாவர்க்கர் அல்ல. என் பெயர் ராகுல் காந்தி. உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன். உயிர் துறப்பேனே தவிர, மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசாரும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.

இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்ததற்காக பிரதமர் மோடியும், அவரது உதவியாளரும்தான் (உள்துறை மந்திரி அமித்ஷா) நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மோடி அரசின் நடவடிக்கையால் (குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது) அசாம், மேகாலயா, திரிபுரா போன்ற வட கிழக்கு மாநிலங்கள் தீப்பற்றி எரிகின்றன. அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மோடி மேற்கொண்டு இருக்கிறார்.

மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அவர், தனது நடவடிக்கைகள் மூலம் அவர்களுடைய பணத்தையெல்லாம் பறித்துக்கொண்டார். எல்லா நேரத்திலும் தான் மட்டுமே தொலைக்காட்சியில் தோன்றவேண்டும் என்று விரும்புகிறார்.

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களின் பாக்கெட்டுகளில் பணம் இல்லாதவரை நாடு முன்னேற முடியாது.

நாட்டில் நேர்மையான தொழில் அதிபர்கள் பலர் இருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்களைப் போல் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்கள் பங்காற்றமுடியும் என்று நம்புகிறேன்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி. வரி முக்கிய காரணம் ஆகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக உள்ளது. இதை அளவிடுவதற்கான முறையை பாரதீய ஜனதா மாற்றிய பின்னரும்கூட, வளர்ச்சி இப்படித்தான் இருக் கிறது. முந்தைய முறையை பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அளவிட்டால் வெறும் 2.5 சதவீதமாகத்தான் இருக்கும்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மோடி அரசு கூறியது. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தால் அதன் பிறகு மீளவே முடியவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து மோடிக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை. மக்களை பிளவுபடுத்துவதும், உண்மையான பிரச்சினைகளை மறைப்பதும்தான் அவர்களுடைய வேலை. அவர்களது பிளவுபடுத்தும் வேலையால் நாட்டின் அமைதியான சூழ்நிலை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.

பாரதீய ஜனதாவினர் தாங்கள் விரும்பும்போதெல்லாம் ஒரு சட்டத்தை திணிப்பதையும், ஒரு சட்டத்தை திரும்பப்பெறுவதையும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். விவாதங்கள் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியாவின் ஆத்மாவை குலைப்பதோடு, நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை காப்பாற்ற போராட வேண்டும். மக்களுக்காக எதையும் தியாகம் செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளது. இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்றும், ஆனால் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும், மக்கள் வேலைகளை இழப்பதாகவும், தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும் கூறினார்.

மேலும், அநீதிக்கு எதிராக போராட தவறினால் நாம் கோழைகள் ஆகிவிடுவோம் என்றும், நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நாடு பிளவுபட தொடங்கிவிடும் என்றும் கூறினார்.

பிரியங்கா காந்தி தனது பேச்சின் போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் (உத்தரபிரதேச மாநிலம்) இளம்பெண் பற்றியும் குறிப்பிட்டார். அந்த பெண்ணை பார்த்தபோது ரத்தக்களரியில் தனது தந்தையின் உடலை பார்த்தது போல் இருந்தது என்றும், ஒரு விவசாயி மகளின் ரத்தம், இந்த நாட்டோடு கலந்து இருக்கிறது என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மோடி ஆட்சிக்கு வந்ததாக குற்றம்சாட்டினார்.

2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடிக்கு உயர்த்திக்காட்டப்போவதாக கூறிய மோடி, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் என்றும், ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு முற்றிலுமாக அழித்துவிட்டதாக குறிப்பிட்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.