மாநில செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க.- தி.மு.க.மோதல் பெங்களூரு சொகுசு விடுதியில் கவுன்சிலர்கள் தங்க வைப்பு + "||" + In local bodies To capture positions ADMK and DMK Fight Luxury accommodation The councilors are staying

உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க.- தி.மு.க.மோதல் பெங்களூரு சொகுசு விடுதியில் கவுன்சிலர்கள் தங்க வைப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க.- தி.மு.க.மோதல் பெங்களூரு சொகுசு விடுதியில் கவுன்சிலர்கள் தங்க வைப்பு
உள்ளாட்சி அமைப்பு களில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக கூறி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே மோதல் நடந்தது. பெங்களூரு சொகுசு விடுதியில் கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோவில்பட்டி,

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தலைவர், துணைத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கட்சியினர் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.


இதனால் கோவில்பட்டி யூனியனில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தலைவர், துணைத்தலைவர் பதவியை பெறுவதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா, கோவில்பட்டி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலையில் நடந்தது.

இதையடுத்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரும், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 பேரும் என மொத்தம் 11 பேர் முதலில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றனர். பின்னர் அவர்கள் 11 பேரும் யூனியன் அலுவலகத்தில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டனர்.

இதற்கிடையே, சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்களை தி.மு.க.வினர் வேனில் கடத்தி செல்வதாக கூறி, யூனியன் அலுவலகம் அருகில் அந்த வேனின் முன்பு அமர்ந்து அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அந்த வேனை போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் 12 பேர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த ராம்சிங் என்பவரும் கவுன்சிலராக பதவியேற்றார். பதவியேற்ற பிறகு தி.மு.க. கவுன்சிலர் ராம்சிங்கை, திருவட்டார் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜாண் பிரைட் அலுவலகத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தார்.

அப்போது, அங்கு தயாராக நின்ற மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.வின் காரில் அவரை ஏற்றிவிட முயன்றார். இதைகண்ட மற்றொரு தி.மு.க. கவுன்சிலரான ஜெகநாதன் இதுபற்றி ஜாண் பிரைட்டிடம் தட்டி கேட்டார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மனோதங்கராஜூம் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருதரப்பு ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தக்கலை போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்து வைத்தார். பின்னர், கவுன்சிலர் ராம்சிங்கிடம் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அவர், மனோதங்கராஜூடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து அவருடன் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜெகநாதன் திருவட்டார் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில,் தனக்கு ஆதரவாக செயல்பட்ட கவுன்சிலர் ராம்சிங்கை, மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. கடத்தி சென்றதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க.வினர் 11 இடங்களிலும், தி.மு.க.வினர் 5 இடங்களிலும், தே.மு.தி.க. 2 இடங்களிலும் சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். நேற்று பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பதவி ஏற்பு முடிந்த சிறிது நேரத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க.வினரிடையே 2 குழுக்களாக பிரிவு ஏற்பட்டு மோதல் நிலவியது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய வார்டு உறுப்பினர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 13 பேர் ஒரு வாகனத்தில் ஏறி பெங்களூருவுக்கு செல்ல முயன்றனர். அப்போது சானமாவு பகுதி அ.தி.மு.க. கவுன்சிலர் சம்பங்கி தனது தலைமையில் ஆதரவாளர்களை திரட்ட முயன்றார். இதனால் அங்கு அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் பெங்களூருவுக்கு சென்று விட்டனர். அவர்கள் அங்கு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் அன்று அவர்கள் சூளகிரிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலுமலை பகுதி அ.தி.மு.க. கவுன்சிலர் சேட்டு, பங்கனஅள்ளி அ.தி.மு.க. கவுன்சிலர் வரதன் ஆகிய 2 பேரும் பதவி ஏற்பு முடிந்தும் வீட்டிற்கு செல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். இது குறித்து அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட போது தங்களை ஓட்டுக்காக கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், தங்களுக்கு உயிர் பயம் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

மேலும் அவர்கள் தேர்தல் அலுவலர் பாபுவிடம் கடிதம் ஒன்றையும் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல ஓசூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க. 8 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், தே.மு.தி.க., சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. நேற்று பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முரளியை தி.மு.க.வினர் சிலர் வளைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் ஒரு காரில் வந்து அ.தி.மு.க கவுன்சிலர் முரளியை குண்டுகட்டாக தூக்கி கொண்டு காரில் ஏற்றி சென்று விட்டனர். இதன் காரணமாக ஓசூர், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பரபரப்பாக காணப்பட்டது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம் கருக்கல்வாடி ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்பு முடிந்ததும் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். ஒரு மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றம்
13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
2. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி - அ.தி.மு.க., பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில் அ.தி.மு.க., பா.ம.க.வினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த நடிகை நமீதா
அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகை நமீதா பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
4. அ.தி.மு.க. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
5. இடைத்தேர்தலில் வெற்றி: கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை