மாநில செய்திகள்

சோதனைச் சாவடியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் பரிசு போலீசார் அறிவிப்பு + "||" + Rs 7 lakh reward for giving clues to terrorists

சோதனைச் சாவடியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் பரிசு போலீசார் அறிவிப்பு

சோதனைச் சாவடியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் பரிசு போலீசார் அறிவிப்பு
சோதனைச் சாவடியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக போலீசார் அறிவித்துள்ளதுடன், 2 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
நாகர்கோவில், 

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் கடந்த 8-ந்தேதி இரவு களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டும், வெட்டுக்கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு காரில் கேரள மாநிலத்துக்கு தப்பிச்சென்றனர்.

பலியான வில்சனின் உடல் நேற்று முன்தினம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று முன்தினம் களியக்காவிளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கொலையாளிகள் விவரம்

வில்சன் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வில்சனை கொல்லும் சம்பவமும், கொலையாளிகளின் அடையாளமும் தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை தமிழக போலீசார், கேரள மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கொலையாளிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும், அவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம்(25), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (27) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநில போலீசார் 2 பேரின் உருவப்படங்களையும் வெளியிட்டு, அவர்களைப்பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்தனர்.

ரூ.7 லட்சம் பரிசு

இந்தநிலையில் நேற்று தமிழக காவல்துறை, அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டு, குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிந்தால் குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அத்தோடு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நல்ல முன்னேற்றம்

கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் குமரி மாவட்டத்திலேயே தங்கியிருந்து குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்கள். நேற்று காலையில் அவர்கள் இதுதொடர்பாக ஆலோசனையும் நடத்தினார்கள்.

இந்தநிலையில் பயங்கரவாதிகள் 2 பேரின் நண்பர்கள் மற்றும் அவர்களுடன் அடிக்கடி தொடர்பில் உள்ளவர்கள் என 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நேற்று தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர், தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

3 பேரிடம் விசாரணை

போலீஸ் அதிகாரி வில்சன் கொலை தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கள்ளிக்காடு என்ற இடத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சையது இப்ராகிம் (35), அப்பாஸ் (32) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் கேரள போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதேபோல், திருவனந்தபுரம் அருகே பூத்துறை பகுதியில் ரபீக் என்பவரையும் போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். விசாரணையில், இவர்கள் 3 பேருக்கும் போலீஸ் அதிகாரி வில்சன் கொலையில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.