தேசிய செய்திகள்

கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் வெடிவைத்து தகர்ப்பு + "||" + Two apartment blocs of Kochi’s Maradu flats demolished

கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் வெடிவைத்து தகர்ப்பு

கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் வெடிவைத்து தகர்ப்பு
கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகள் நேற்று வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சி அருகே மரடு பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. எச் 2 ஓ ஹோலி பெய்த் (19 மாடி), ஆல்பா செரீன் (16 மாடி), ஜெயின் கோரல் கோவ் (17 மாடி) மற்றும் கோல்டன் காயலோரம் (17 மாடி) என பெயரிடப்பட்ட இந்த கட்டிடங்களில் 350-க்கும் அதிகமான வீடுகள் இருந்தன.


மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டிருந்த இந்த குடியிருப்புகளில் வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புடையதாகும். இந்த அதிக தொகையும் கொடுத்து பலர் அங்கு வீடு வாங்கியிருந்தனர். மொத்தம் 240 குடும்பங்கள் இந்த 4 கட்டிடங்களிலும் தங்கி இருந்தனர்.

அரபிக்கடலோரம் கோபுரங்கள் போல கம்பீரமாக காட்சியளித்த இந்த கட்டிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கல் ஏற்பட்டது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு, 4 கட்டிடங்களையும் இடித்து அகற்றுமாறு கடந்த ஆண்டு மே மாதம் கேரள அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 கட்டிடங்களையும் இடித்து அகற்றுமாறு கடந்த செப்டம்பர் 27-ந் தேதி உத்தரவிட்டது. மேலும் அங்கு வீடு வாங்கியவர்களுக்கு ரூ.25 லட்சம் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

எனினும் அடுக்குமாடி கட்டிடங்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றில் வசித்து வந்த குடும்பத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அவர்களுடன் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு பிரிவினர் அரசின் நிவாரணத்தை ஏற்றுக்கொண்டனர். மற்றொரு பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை அக்டோபர் 18-ந் தேதி முதல் கேரள அரசு மேற்கொண்டது. முதலில் கட்டிடங்களில் மின்சாரம், குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள் வெளியேறினார்கள்.

பின்னர் கட்டிடங்களில் இருந்த ஜன்னல், கதவுகளை அகற்றும் பணிகள் தொடங்கின. பின்னர் கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பதற்காக கடந்த ஒரு மாதமாக அவற்றில் வெடி மருந்துகள் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து 2 கட்டிடங்களை நேற்று இடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்டிடங்களுக்கு அருகே 200 மீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவில் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து பகல் 11.17 மணி அளவில் எச் 2 ஓ ஹோலி பெய்த் கட்டிடம் முதலில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதன் 19 மாடிகளும் புழுதி பறக்க விழுந்து 5 வினாடிகளுக்குள் தரைமட்டமாயின. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு இடிபாடுகளுக்கு மேல் தண்ணீரை பீய்ச்சியடித்து புழுதியை கட்டுப்படுத்தினர்.

பின்னர் சில நிமிட இடைவெளியில் ஆல்பா செரீன் கட்டிடமும் தகர்க்கப்பட்டது. இது பிளாக் ஏ மற்றும் பி என இரட்டை கோபுரம் போல கட்டப்பட்டிருந்த கட்டிடமாகும். அதன் இடிபாடுகள் மீதும் தண்ணீரை பீய்ச்சி புழுதி கட்டுப்படுத்தப்பட்டது.

இதில் முதல் கட்டிடத்தின் ஒரு பகுதி அருகில் உள்ள பாலம் ஒன்றின் மீது விழுந்தது. எனினும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்ததாக இடிக்கும் பணிகளை மேற்கொண்ட எடிபிஸ் என்ஜினீயரிங் நிறுவன இயக்குனர் உத்கார்ஷ் மேத்தா கூறினார்.

2 கட்டிடங்களும் சில வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வை ஏராளமான மக்கள் அருகில் உள்ள வீடுகளின் மாடியில் இருந்து பார்த்தனர். இந்த பணிகளை பார்வையிட குவிந்த மக்களால் மரடு பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கட்டிட இடிக்கும் பணிகள் நடந்த இடத்தில் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த கட்டிடங்களில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட இடிப்பு பணிகளை பார்க்கவில்லை. அங்கு ரூ.1 கோடியில் வீடு வாங்கியிருந்த சம்சுதீன் என்பவர் கூறுகையில், ‘எங்கள் கனவுகள் அனைத்தும் எங்கள் கண்முன்னே தகர்க்கப்படுவது வலியை ஏற்படுத்துகிறது. எனவே எனது மனைவியும், பிள்ளைகளும் இதை பார்க்க விரும்பவில்லை. எந்த தவறும் செய்யாமல் இந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கிறோம்’ என்று கூறினார்.

இங்குள்ள மற்ற 2 அடுக்குமாடி குடியிருப்புகளான ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகியவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

1. கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு, ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை கொச்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.