தேசிய செய்திகள்

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு + "||" + West Bengal: PM Narendra Modi meets CM Mamata Banerjee in Kolkata. The PM is in Kolkata to take part in 150th anniversary celebrations of the Kolkata Port Trust.

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
கொல்கத்தா,

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். அப்போது குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கொல்கத்தாவில் தொடர் போராட்டங்களையும் நடத்தினார். என் பிணத்தின் மீதுதான் அதனை அமல்படுத்த முடியும் என்றும் காட்டமாக பேசினார்.


கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக 2 வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனால் அப்போதே ஊடகங்கள் பிரதமர் மோடியும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகத்தை கிளப்பின.

இந்நிலையில் கொல்கத்தா துறைமுக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று விமானம் மூலம் கொல்கத்தா வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ரேஸ்கோர்ஸ் சென்றார். அங்கு பிரதமரை மேற்குவங்காள கவர்னர் ஜகதீப் தாங்கர், மாநில மந்திரி பிர்ஹத் ஹக்கிம், பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் உள்பட பலர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருக்கு முன்னதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசினார்கள்.

அதிகாரிகள் தரப்பில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. இருவரும் இதற்கு முன்னரும் கவர்னர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமாகவும், அரசு வழக்கப்படியும் நான் பிரதம மந்திரியை சந்தித்து பேசினேன். மத்திய அரசிடமிருந்து ரூ.35 ஆயிரம் கோடி மாநிலத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து அவரிடம் விளக்கினேன்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் பிரச்சினை குறித்தும் பேசினேன். அந்த 3 பிரச்சினைகளை நாங்களும் எதிர்க்கிறோம். நாட்டில் எந்த மக்களும் பாதிக்கப்படக் கூடாது, யாரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படக் கூடாது என்று கூறினேன்.

இந்த மூன்றையும் திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

மாநில நிலுவைத் தொகை பிரச்சினை பற்றி பிரதமர் கூறும்போது, ‘வேறு சில அரசு நிகழ்ச்சிகளுக்காக இந்த நகருக்கு வந்திருக்கிறேன். திரும்பிச் சென்றதும் இதுபற்றி பார்க்கிறேன்’ என்றார். குடியுரிமை திருத்த சட்டம் பிரச்சினைக்கு, ‘நீங்கள் டெல்லிக்கு வரும்போது இதுபற்றி உங்களுடன் நான் பேசுகிறேன்’ என்றார். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

பின்னர் மம்தா பானர்ஜி கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு கட்சியின் மாணவர் அணியினர் எஸ்பிளனேடு பகுதியில் நடத்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார். கவர்னர் மாளிகைக்கு அருகில் உள்ள அந்த இடத்தில் போலீசார் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

பிரதமர் வருகையையொட்டி கொல்கத்தாவில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாணவர் அணியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...